என் மலர்
செய்திகள்

இளம்பெண்ணிடம் நகை பறித்து தப்பிய கொள்ளையனை விரட்டி பிடித்த பொதுமக்கள்
நெல்லை:
நெல்லை டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் லட்சுமி(வயது 22). இவர் இன்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென லட்சுமி அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். உடனே லட்சுமி திருடன் திருடன் என கத்தினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே கொள்ளையர்கள் பைக்கில் தப்பினர். இதையடுத்து அங்குள்ள இளைஞர்கள் திரண்டு பைக்கை பின்னால் துரத்தினர். கொள்ளையர்கள் டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக மேட்டுதெரு பகுதிக்குள் நுழைந்தனர். எனினும் பொதுமக்கள் விடாமல் துரத்தி சென்றனர். மக்கள் துரத்துவதை பார்த்த கொள்ளையர்கள் லட்சுமியிடம் பறித்த செயினை கீழே போட்டனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளையும் கீழே போட்டுவிட்டு ஓடினார்கள். மேட்டுத் தெருவை தாண்டியதும் பின்னால் துரத்தி சென்ற பொதுமக்களிடம் ஒருவன் சிக்கினான். அவனுடன் வந்த மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு கொள்ளையர் விட்டு சென்ற மோட்டார்சைக்கிளையும், அவர்கள் போட்டுவிட்டு சென்ற செயினையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மேலப்பாளையம் கணேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் சுரேஷ்(17) என்பதும், தப்பி ஓடியவர் மேலப்பாளையத்தை சேர்ந்த மைதீன் மகன் ராஜா என்றும் தெரியவந்தது.
சுரேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுரேஷ், ராஜா ஆகிய 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சென்னை பதிவு எண் கொண்டது. எனவே இதுவும் திருடப்பட்டதாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சினிமாவில் வருவது போன்ற இந்த சம்பவம் டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






