search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே நாற்று நடும் கருவியை உருவாக்கிய மாணவி: ஆசிரியர்கள் பாராட்டு
    X

    முத்துப்பேட்டை அருகே நாற்று நடும் கருவியை உருவாக்கிய மாணவி: ஆசிரியர்கள் பாராட்டு

    முத்துப்பேட்டை அருகே எரிசக்தி இல்லா எளிய நாற்று நடும் கருவியை கண்டுபிடித்த மாணவி சரண்யாவை பள்ளியின் தலைமையாசிரியர் கோதண்டராமன், அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கடந்த ஆண்டுகளாக பல அரிய கருவிகளை கண்டுபிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா “எரிசக்தி இல்லா எளிய நாற்று நடும் கருவி” ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கி உள்ளார். இந்த கருவி சாதாரண ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் நன்றாக உழவு செய்யபட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் சேறு புரட்டப்பட்ட வயலில் சரியான இடைவெளியில் இந்த எரிசக்தி இல்லா எளிய நாற்று நடும் கருவியை இழுத்து சென்றால் ஒவ்வொரு பட்டமாக கதிர்களை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும்.

    இதன் மூலம் சிறு குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டுவிட முடியும். இந்த கருவியை உருவாக்க பிளைவுட் ஷீட். போம் ஷீட். சைக்கிள் பிரிவீல். சைக்கில் செயின். சிறிய புள்ளி பெரிய புள்ளி தேவைக்கேற்ற அளவுகளில் சிறிய பெரிய நட்டுகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாணவி சரண்யா கூறியதாவது:–

    நான் இணையத்தில் பல்வேறு விதமான நாற்று நடும் நவீன கருவிகளைக் கண்டுள்ளேன். அவற்றின் விலைப்பட்டியலை ஆராய்ந்து பார்க்கும் பொழுது லட்சக்கணக்கான ரூபாய் விலைப்பட்டியலைக் கண்டேன். இது பெரிய பணக்கார விவசாயிகளால் மட்டுமே வாங்க முடியும். சிறு குறு விவசாயிகள் குறைவான நிலப்பரப்பை யாருடைய உதவியும் இன்றி நாற்றினை நட்டிட ஏதுவாய் எளிய முறையில் எங்கள் ஆசிரியர்களின் உதவியோடு இக்கருவியை வடிவமைத்துள்ளேன்.

    பண்டைய காலத்தில் ஏர் கலப்பை போன்றவற்றை மரத்தில் செய்தே பயன்படுத்தினர். அதனை கருத்தில் கொண்டு மரப்பலகையைக் கொண்டு ஒரு பெரிய சக்கரம் ஒன்றை செய்தேன். அதனை இரும்பு மையத்தைக்கொண்டு இணைத்தேன். பின்னர் சைக்கிள் செயின் உதவியோடு 4 அடி பிளைவுட் ஷீட்டில் சிறிய புள்ளியோடு இணைத்தேன். அந்த புள்ளியோடு ஒரு கவையை இணைத்து மேலும் கீழும் இயங்குமாறு செய்தேன். அந்த கவை மேலும் கீழும் இயங்கும் இடத்தில் நாற்றுகளை அடுக்கி வைக்க பிளைவுட்டைக் கொண்டு 120 டிகிரி கோண அளவில் பிளைவுட் சாய்வு ஒன்றை தயார் செய்தேன்.

    முன்பக்க பெரிய சக்கரத்திற்கு முன்னால் படகு போன்ற அமைப்பில் பிளைவுட்டைக் கொண்டு அமைத்தேன். அதில் கயிறு கட்டி இழுப்பதற்கு கம்பி வளையம் ஒன்றை அமைத்தேன். பிளைவுட் ஷீட்டின் அடிப்பகுதியிலும் சக்கரங்களிலும் சேறு மண் போன்றவை பிடித்து கொள்ளாமல் இருக்க போம் ஷீட்டை பயன்படுத்தி ஒட்டினேன். நன்றாக உழவு செய்யபட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் சேறு புரட்டப்பட்ட வயலில் சரியான இடைவெளியில் நம்முடைய எளிய இயந்திரத்தை இழுத்து செல்லும் பொழுது ஒவ்வொரு பட்டமாக யாருடைய உதவியும் இன்றி நடமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எரிசக்தி இல்லா எளிய நாற்று நடும் கருவியை கண்டுபிடித்த மாணவி சரண்யாவை பள்ளியின் தலைமையாசிரியர் கோதண்டராமன், அறிவியல் ஆசிரியை ஜெயலட்சுமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    Next Story
    ×