search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறில் வருணஜெபம்: காஞ்சி இளைய சங்கராச்சாரியார் தொடங்கி வைத்தார்
    X

    திருவையாறில் வருணஜெபம்: காஞ்சி இளைய சங்கராச்சாரியார் தொடங்கி வைத்தார்

    திருவையாறு காவிரி ஆற்றில் வருண ஜெபம் நேற்று நடந்தது. இதனை காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கிவைத்தார்.
    குருப்பெயர்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடக்கிறது. அந்தநாளில் குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் துலாம் ராசியில் சஞ் சரிக்கிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் போது ஒவ்வொரு நதியிலும் பிரம்மாவிடம் இருக்கும் புஷ்கரன் ஐக்கியமாவது ஐதீகம். அப்போது 3½ கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் அரூவ நிலையில் இருக்கும்.

    வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி குருப்பெயர்ச்சியின் போது புஷ்கரன் துலாம் ராசிக்குரிய காவிரி நதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்று காவிரியில் நீராடினால் பாவங்கள், தோஷங்கள் நீங்கும். மோட்ச நிலை கிடைக்கும்.

    காவிரி புஷ்கர விழாவாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடை பெறும் இந்த விழாவின் போது முக்கிய தலமாக கருதப்படும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடுவது விசேஷம்.

    காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்ய மண்டப படித்துறையில் நேற்று வருணஜெபம் நடைபெற்றது. வருணஜெபத்தினை காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீன கர்த்தர்கள் தொடங்கி வைத்தனர்.

    இதற்காக திருவையாறு காவிரி ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டு அதில் வந்த ஊற்றுநீரில் வருண ஜெபம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விராட பருவம் வாசித்தல், பர்ஜன்ய சாந்தி ஜெபம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


    இதில் சூரியனார் கோவில் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிதிருமடம் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் சுவாமிநாதன் தம்பிரான் சுவாமிகள், கர்நாடக நாகேஸ்வர நந்தா, புதுக்கோட்டை சிவபிரமானந்தா, அம்மன்பேட்டை கிருஷ்ணாநந்தா, திருவையாறு பழ அடியார் சுவாமிகள், சென்னை ஞானேஸ்வரி மாதாஜி, சுவாமி ராமாநந்தம், காவேரி ரதயாத்திரை தலைவர் சந்திரமோகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரி புஷ்கரம் அறக் கட்டளை ஒருங்கிணைப் பாளர் மகாலட்சுமி சுப்பிர மணியம் செய்திருந்தார்.

    பின்னர் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவையாறு, பாபாசாமி அக்ரஹாரம் அண்ணாசாமி பாகவதர் இல்லத்தில் அமைந்துள்ள சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
    Next Story
    ×