search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா
    X

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வருடந்தோறும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு திருப்பணி வேலைகள் நடப்பதால் கருவறை தவிர வெளிப்பிரகார மண்டபம், உள் பிரகார மண்டபங்கள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனாலும் ஆடித்திருவிழாவை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாட கோவில் அதிகாரிகள் மற்றும் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது.

    2-ந் தேதி காலை 6.30 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அம்மன் புறப்பாடும், இரவு 8 மணிக்கு கம்பம் நடல் மற்றும் திருக்கல்யாண உற்சவமும், 9 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

    3-ந் தேதி அம்மன் புஷ்ப கேடயத்தில் புறப்படுதலும், 4-ந் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் கிளி வாகனத்தில் புறப்படுதலும், 5-ந் தேதி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 6-ந் தேதி இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் புறப் பாடும், 7-ந் தேதி இரவு 8 மணிக்கு யாளி வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது.

    8-ந் தேதி இரவு 8 மணிக்கு காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 8.30 மணிக்கு கிச்சிப்பாளையத்தில் இருந்து பராசக்தி காளியம்மனை கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வருதலும், இரவு 12 மணிக்கு சக்தி அழைத்தல் பூஜையும் நடைபெறுகிறது.

    9-ந் தேதி காலை 9 மணிக்கு புஷ்ப விமானத்தில் அம்மன் புறப்பாடும், பாண்டு வாத்திய மேள கச்சேரியுடன் சக்திகரகம் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. இரவு முழுவதும் பொங்கல் வைத்தலும், பக்தர்கள் உருளு தண்டம் பிரார்த்தனை செலுத்துதலும், 10-ந் தேதி காலை முதல் இரவு 10 மணி வரை பொங்கல் வைத்தல், பக்தர்கள் உருளு தண்டம் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    11-ந் தேதி காலை முதல் இரவு 10 மணி வரை பொங்கல் வைத்தல், உருளுதண்டம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது.

    12-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருத்தேரில் புறப்பாடும், 14-ந் தேதி இரவு 10.30 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சிறப்பு மேளக் கச்சேரியுடன் சத்தாபரண திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு அம்மன் புறப்பாடு வசந்த உற்சவமும், 16-ந் தேதி பகல் 12 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு அலங்கார ஆராதனை, அன்னதானம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் பொங்கல் வைத்தல், உருளுதண்டம் நிகழ்ச்சியில் விடிய விடிய பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைப்பார்கள்.

    கோவில் திருப்பணி வேலைகள் நடந்து வருவதால் பக்தர்கள் உருளுதண்டம் போடுவதற்கு வசதியாக அம்மன் கருவறையை சுற்றி மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கு தடையின்றி உருளுதண்டம் போடலாம்.

    மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்வதற்காக தர்ம தரிசன வழி, சிறப்பு தரிசன வழி என தனித்தனி வழியாக பிரித்து தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×