search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெண்களின் கருவை காக்கும் பிடாரி கருக்காத்தம்மன் கோவில்
    X

    பெண்களின் கருவை காக்கும் பிடாரி கருக்காத்தம்மன் கோவில்

    பிடாரி கருக்காத்தம்மனை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும், அற்புத சக்தி கொண்டவள் இந்த அன்னை என்றும் வழிபட்டு பேறு பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
    மாமல்லபுரம் நகரின் எல்லையில் அமைந்துள்ளது, பிடாரி கருக்காத்தம்மன் கோவில். இங்குள்ள அம்மனை, அந்தப் பகுதி மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் ஊரின் கிழக்கே தல சயன பெருமாள் ஆலயமும், மேற்கே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக கருக்காத்தமன் ஆலயமும் திகழ்கிறது.

    இந்த அம்மனை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும், அற்புத சக்தி கொண்டவள் இந்த அன்னை என்றும் வழிபட்டு பேறு பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு, சுகாசன நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் கருக்காத்தம்மன். இந்த அன்னையின் கண்களில் கருணையும், வீரமும் பிரதிபலிக்கிறது.

    தல வரலாறு :

    பூலோக மக்களும், தேவர்களும், மகிஷாசூரன் என்ற அரக்கனால் துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனால் அவனை அழிக்கும்படி அனைவரும் காளி தேவியிடம் முறையிட்டனர். இதையடுத்து மைசூரில் தோன்றிய காளியம்மன், கோபமான தோற்றத்துடன், எருமை தலையைக் கொண்ட மகிஷாசூரனை வதம் செய்ய சிங்கத்தின் மீது அமர்ந்து மாமல்லபுரம் நோக்கி வந்தாள்.

    மாமல்லபுரத்தில் பிடாரி ரதம் அருகில் உள்ள மலையில், மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு சம்ஹாரம் செய்தாள். ஆனால் அந்த அசுரனின் உடலில் இருந்து விழுந்த ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அரக்கன் தோன்றினான். இதையடுத்து அன்னையானவள், அனைத்து அரக்கர்களையும் வதம் செய்து, அவர்களின் ரத்தம் பூமியில் சிந்தும் முன்பாக கபால ஓட்டில் தாங்கி குடித்தாள்.

    அன்னையின் வெற்றியைத் தொடர்ந்து தேவர்கள், பூமாரி பொழிந்து அவளை வேண்டினர். பின்னர் காளியானவள், கோபம் குறைந்து சாந்தமாகி, மாமல்லபுரம் காட்டில் மலைப்பாறையில் அமர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினாள் என்று தல வரலாறு கூறுகிறது.

    கோவில் சிறப்பு :

    முன்னோர்களின் சாபத்தால் கரு தங்காமல், குழந்தை பாக்கியமில்லாமல் தவித்தாள் ஒரு பெண். அவள் இத்தல அம்மனை தினமும் வேண்டி, தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தாள். இதையடுத்து அந்தப் பெண், கருவுற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். எனவே ஊரைக் காக்கும் தெய்வமாக விளங்கிய இந்த அம்மனை, கருவை காக்கும் தெய்வமாகவும் மக்கள் வழிபடத் தொடங்கினர். அம்மனுக்கும் ‘கரு காத்த அம்மன்’ என்ற பெயர் வந்தது.

    அதேபோல் கருச்சிதைவு ஏற்பட்டு, மீண்டும் பல ஆண்டு காலம் கரு தங்காமல் இருந்த பெண்கள் இருவர், இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டனர். கோவில் தீர்த்தத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலயத்தை வலம் வந்து அம்மனை வணங்கினர். இதையடுத்து அவர்களுக்கு கரு தங்கி, குழந்தை பாக்கியம் கிடைத்தது என்பதும் செவி வழிச் செய்தியாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இங்கு வந்து, கருக்காத்த அம்மனை வணங்கினால் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர் களுக்குக் கூட குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

    மேலும் ஏவல், பில்லி, சூனியம் அகலவும், சித்தபிரம்மை விலகவும், வறுமை நீங்கி குடும்பம் வளம் சேரவும், தீராத சாப நோய்கள் தீரவும், மாங்கல்ய பாக்கியம் பெறவும் கருக்காத்தம்மன் அருள்புரிகிறாள். திருமணம் ஆன பெண்கள், மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி அம்மனை நினைத்து தலவிருட்சமான எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சி போடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை.

    இத்தல அம்மன், 6 மாதம் ஆக்ரோஷமான முகத்துடனும், 6 மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும். திருவிழா நாட்களில் பெண்கள் கூட்டம் இங்கே அலைமோதும்.

    ஆடி மாதம் பிறந்து விட்டாலே இந்த கருக்காத்தம்மன் கோவிலில் தினமும் திருவிழாக்கோலம்தான். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னிதி, விநாயகர், நவக்கிரகங்களின் சன்னிதிகளும் உள்ளன. அதேபோல் கோவில் முகப்பில் விநாயகப் பெருமாளின் அவதாரமான, இரண்டு யானைகளின் சிலைகள் உள்ளன. அம்மனை வணங்க வரும் பக்தர்கள், இந்த யானை சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது மரபாக உள்ளது.

    பெண்கள் பலரும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, இத்தல அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். சில பெண்கள் வேப்பிலை ஆடை உடுத்தி அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகிறார்கள். ஆடி மாத நாட்களில் அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமகாப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

    கோவில் அமைப்பு :

    பெரும்பாலும் அம்மன் கோவில்கள் வடக்கு பார்த்த முகமாக காட்சி தரும். ஆனால் இந்த பிடாரி கருக்காத்தம்மன் ஆலயம், கிழக்கு பார்த்த முகமாக காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் ஜடா முடியுடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமை வாய்ந்த இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். மாமல்லபுரம் ஊரின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    திருவிழாக்கள் :

    இந்த அம்மனுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே, புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் 10 நாட்களும், கருக்காத்தம்மன் வீணை ஏந்தும் சரஸ்வதி, அஷ்டலட்சுமி, பத்ரகாளி, மகிஷாசூரனை (அரக்கனை) சம்ஹாரம் செய்தல், சிவனுடன் கூடிய பார்வதி உள்பட பல தேவதைகளின் திருக்கோலங்களில், பூக்களாலும், ஆபரணங் களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருவார். இந்த அருள்காட்சிகள் பார்ப்பதற்கு மனநிறைவைத் தருவதாக அமைந்திருக்கும். 10-ம் நாளான இறுதி நாள் அன்று, கருக்காத்தம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மாமல்லபுரத்தில் வாணவேடிக்கைகளுடன் திருவீதி உலா வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு பூமாலை சாத்தி பயபக்தியுடன் வழிபடுவார்கள்.
    Next Story
    ×