search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மருதகாசி சொந்தமாக தயாரித்த அல்லி பெற்ற பிள்ளை
    X

    மருதகாசி சொந்தமாக தயாரித்த அல்லி பெற்ற பிள்ளை

    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.
    ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.

    "கல்யாணப்பரிசு'' படத்தை இயக்கி, புகழின் சிகரத்தைத் தொட்ட ஸ்ரீதர், "சித்ராலயா'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி "தேன் நிலவு'' படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். இதற்கு இசை அமைக்க ஏ.எம்.ராஜாவும், பாடல்கள் எழுத மருதகாசியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    இந்தப் படத்துக்காக, 3 பாடல்களையும் மருதகாசி எழுதிக் கொடுத்து விட்டார்.

    இதற்கிடையே சிவாஜி பிலிம்சின் இன்னொரு நிறுவனமான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில், "விடிவெள்ளி'' என்ற படம் தயாராகி வந்தது. சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தை ஸ்ரீதர்தான் டைரக்ட் செய்தார். இசை ஏ.எம்.ராஜா. பாடல்கள் மருதகாசி.

    இந்தப் படத்தில் மருதகாசி எழுதிய "கொடுத்துப்பார் பார் உண்மை அன்பை'' என்ற பாட்டு இடம் பெற்றது. அந்த பாட்டுக்கான மெட்டு அடிக்கடி மாற்றப்பட்டது. இதனால் பட அதிபர்களுக்கும், ஏ.எம்.ராஜாவுக்கும் உரசல் ஏற்பட்டது. இதில், மருதகாசியும் பங்கு கொள்ள நேரிட்டதால், ஏ.எம்.ராஜாவுக்கும், மருதகாசிக்கும் மோதல் ஏற்பட்டது. "இனி ஏ.எம்.ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன்'' என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார், மருதகாசி.

    டைரக்டர் ஸ்ரீதர், ஜெமினிகணேசன் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மருதகாசி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

    இதன் காரணமாக, "தேன்நிலவு'' படத்தில் அவர் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த 3 பாடல்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று மருதகாசி கூறிவிட்டார்.

    1956-ம் ஆண்டு, ஏ.பி.நாகராஜன் பட உலகில் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் ïனிட்டில் கே.சோமு (டைரக்ஷன்), கோபண்ணா (கேமரா), டி.விஜயரங்கம் (எடிட்டிங்), கே.வி.மகாதேவன் (இசை), மருதகாசி (பாடல்) ஆகியோர் இருந்தார்கள்.

    இந்த ïனிட் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, ஏ.பி.நாகராஜன் கதை- வசனத்தில் பல்வேறு கம்பெனிகளின் பெயர்களில் படங்கள் தயாரிக்கப்பட்டன.

    மருதகாசி, கே.வி.மகாதேவன், வி.கே.ராமசாமியின் தம்பி முத்துராமலிங்கம், "வயலின்'' மகாதேவன் ஆகிய 4 பேரையும் பங்குதாரர்களாகக் கொண்ட "எம்.எம்.புரொடக்ஷன்ஸ்'' என்ற படக்கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தக் கம்பெனி சார்பில் "அல்லி பெற்ற பிள்ளை'' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தியில் வெற்றிகரமாக ஓடிய "டாங்கா வாலா'' என்ற படத்தின் கதையை தழுவி, திரைக்கதை அமைக்கப்பட்டது.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். திரைக்கதை -வசனம் ஏ.பி.நாகராஜன். டைரக்ஷன் கே.சோமு. பாடல்களை மருதகாசி எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    இந்தப் படத்தில், ஒரு குதிரை முக்கிய கதாபாத்திரமாக நடித்தது. மருதகாசி மங்களூர் சென்று, ஒரு வெள்ளைக்குதிரையை வாங்கி வந்தார். குதிரையைப் பார்த்த சின்னப்ப தேவர், "குதிரைக்கு சுழி சரியில்லையே! விற்றுவிடுங்கள்'' என்றார்.

    ஆனால் திட்டமிட்டபடி, குதிரையை படத்தில் நடிக்க வைத்தார்.

    ஒரு குழந்தை தொட்டிலில் படுத்திருக்க, தொட்டில் கயிற்றை குதிரை தன் வாயினால் இழுத்து, குழந்தையை தூங்க வைக்கும். அப்போது குதிரையின் மன நிலையை விளக்கும் விதமாக, "எஜமான் பெற்ற செல்வமே'' என்ற பாடலை மருதகாசி எழுதினார். அவரும், கே.வி.மகாதேவனும் விரும்பிக் கேட்டுக்கொண்டதால், பாடலை பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் பின்னணியில் பாடினார்.

    6 மாத காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர்களுடன் படக்கம்பெனி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் படம் முடியவில்லை. படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போயிற்று. கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே இருந்தன.

    பாடல் எழுதுவதில் மருதகாசி `பிசி'யாக இருந்த நேரம். ஆனால், அவருக்கு வேண்டாத சிலர், "மருதகாசி சொந்தப் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இனி வெளிப்படங்களுக்கு குறிப்பிட்ட நாளில் பாடல் எழுதித்தர மாட்டார்'' என்று பிரசாரம் செய்தனர்.

    இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறைந்தன.

    இரண்டு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்த "அல்லி பெற்ற பிள்ளை'' 31-7-1959-ல் வெளிவந்தது. படம் ஓரளவு நன்றாக இருந்தும், தோல்வியைத் தழுவியது.

    மருதகாசியின் தம்பி அ.முத்தையன், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். "மருதகாசியின் திரையுலகச் சாதனைகள்'' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

    மருதகாசியின் சொந்தப்பட அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "என் அண்ணன் ஒரே ஒரு படம் எடுத்தார். குசேலர் ஆனார்.

    இந்த காலக்கட்டத்தில் அவர் ஒரு மகத்தான தவறு செய்தார். ஒரு சீமைப்பசுவை வாங்கி வைத்திருந்த அவர், இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் புதிதாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவின்போது, அதை பரிசாகக் கொடுத்து விட்டார்.

    இப்படி பசுவை தானமாகக் கொடுப்பது சரியல்ல என்றும், ஜோதிடப்படி ஏதாவது கிரகக் கோளாறு ஏற்படும்போதுதான் இப்படி செய்வார்கள் என்றும், பசுவை தானம் செய்வது நமது லட்சுமியை அடுத்தவர் வீட்டில் கொண்டுபோய் விடுவதற்குச் சமம் என்றும் டைரக்டர் கே.சோமு என்னிடம் சொன்னார்.

    அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.

    "அல்லி பெற்ற பிள்ளை'' படத்தினால் என் சகோதரர் நஷ்டம் அடைந்ததை அறிந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், என் அண்ணனை சந்தித்து "தூண்டா மணிவிளக்கு'' என்ற கதையை கொடுத்து, அதை படமாக்கச் சொன்னார். என் சகோதரரும் சம்மதித்து, கதைக்கு அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

    பூஜை போட்டு, நடிகர் -நடிகைகளுக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது. படத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி, ரங்காராவ், அசோகன், தாம்பரம் லலிதா போன்றோர் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஏனோ, கடைசியில் என் சகோதரர் பின்வாங்கி விட்டார்.

    பின்னர் இந்தக் கதையை கோபாலகிருஷ்ணனே சொந்தமாகத் தயாரித்தார். அந்தப்படம்தான் "கற்பகம்.'' அந்தப் படம் வெள்ளி விழா கண்டது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' ஸ்டூடியோவை கட்டினார்.''

    இவ்வாறு முத்தையன் கூறினார்.
    Next Story
    ×