search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காரைக்குடி நாராயணன் பட அதிபர் ஆனார்: அச்சாணி படம் பெரிய வெற்றி
    X

    காரைக்குடி நாராயணன் பட அதிபர் ஆனார்: அச்சாணி படம் பெரிய வெற்றி

    "திக்கற்ற பார்வதி'' படத்தின் வெற்றியினால், காரைக்குடி நாராயணன் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.
    "திக்கற்ற பார்வதி'' படத்தின் வெற்றியினால், காரைக்குடி நாராயணன் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.

    "திக்கற்ற பார்வதி''யில் அவர் எழுதிய வசனங்கள் பெரிதும் பாராட்டப்பட்டதால், 11 படங்களுக்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் "தீர்க்க சுமங்கலி'' பெரிய வெற்றிப்படம். இதில், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தனர். இந்தப் படத்தில்தான், தமிழ்ப்பட உலகில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். அவர் இப்படத்தில் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'' என்ற பாடல், மிகப்பிரபலம்.

    இந்தப் படத்துக்கு பாடல்களை வாலி எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

    "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற நகைச்சுவை படத்துக்கு கதை வசனம் எழுதினார். இதில் சிவகுமார், ஜெயசித்ரா நடித்தனர். ரா.சங்கரன் டைரக்ட் செய்தார்.

    மூன்று பேர்களை மட்டும் கதாபாத்திரங்களாக வைத்து, "தூண்டில் மீன்'' என்ற கதையை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார். அதற்கு திரைக்கதை வசனம் எழுதினார், காரைக்குடி நாராயணன். மேஜர் சுந்தரராஜன், லட்சுமி, `ஜுலி' படத்தின் கதாநாயகன் மோகன் ஆகியோர் நடித்தனர்.

    இந்தப்படத்தை ரா.சங்கரன் டைரக்ட் செய்தார். சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த "அன்பே ஆருயிரே'' படத்துக்கு வசனம் எழுதினார்.

    கதை-வசன ஆசிரியராக இருந்த காரைக்குடி நாராயணன், பின்னர் டைரக்டராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.

    தனது புகழ் பெற்ற மேடை நாடகமான "அச்சாணி''யை, 1978-ல் திரைப்படமாகத் தயாரித்தார். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளையும் அவரே ஏற்றார். முத்துராமன், லட்சுமி நடித்தனர். இந்தப்படத்தில், ஷோபா அறிமுகமானார். இளையராஜா இசை அமைத்தார்.

    "அச்சாணி'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும், அதைத் தயாரிக்கும்போது காரைக்குடி நாராயணன் பல சோதனைகளை அனுபவித்தார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "ஒழுங்காக கதை வசனம் எழுதிக்கொண்டிருந்த என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். `அச்சாணியை நாம் சேர்ந்து தயாரிக்கலாம். பணப்பொறுப்பு என்னைச் சேர்ந்தது. நீ கதை வசனம் எழுதுவதோடு, டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுக்கொள்' என்றார். நானும் சம்மதித்தேன்.

    அழைப்பிதழ் அடிக்கப்பட்ட நிலையில், முதல் நாளே பிலிம் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையை அவர் உருவாக்கினார். அன்றுதான் நான் முதன் முதலில் புரோ நோட்டில் கையெழுத்து போட்டு கடன் வாங்க நேர்ந்தது.

    அச்சாணியில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. பைனான்ஸ் செய்ய வந்தவர் கூறியதால், ஜெய்சங்கருக்கு பதிலாக முத்துராமன் நடித்தார். ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அச்சாணி தொடக்க விழாவில் ஜெய்சங்கர் வந்து கலந்து கொண்டார்.

    பணம் இல்லாமல் ஒரே நாள் படப்பிடிப்புடன் படம் நின்றது. ஆறு மாதங்களுக்குப்பிறகு படம் மீண்டும் துவங்கியது.

    இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவாக வேண்டிய நிலையில், அருணாசலம் ஸ்டூடியோவில் இயந்திரம் பழுதுபட்டு அன்று காலை தடங்கலானது.

    என் நிலையைப் புரிந்து கொண்ட இளையராஜா, அதே இரண்டு பாடல்களையும் 3 மணி நேரத்துக்குள் பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்து கொடுத்து எனக்கு நிம்மதியைத் தந்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் பாடிய "தாலாட்டு பிள்ளையுண்டு'', ஜானகி பாடிய "மாதா உன் கோயிலில்'' ஆகிய பாடல்களே அவை. இரண்டு பாடல்களும் பிரபலமாயின.

    மேலூர் கணேஷ் திரையரங்கின் அதிபர் மீனாட்சி சுந்தரத்தின் உதவியால், தடைகளைக் கடந்து, படத்தை முடித்தேன்.

    நான் பட்ட சிரமங்களுக்குப் பலன் கிடைத்தது. படம் வெற்றி பெற்றது. பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்தன.''

    இவ்வாறு காரைக்குடி நாராயணன் கூறினார்.

    அடுத்து இவர் கதை-வசம் எழுதி, இயக்கி தயாரித்த "மீனாட்சி குங்குமம்'' படத்தில், விஜயகுமார், ஸ்ரீபிரியா நடித்தனர்.

    இப்படத் தயாரிப்பில் ராமராஜன் துணை இயக்குனராக பணியாற்றினார்.

    இந்தப் படத்தில், சின்னப்பதேவர் பாணியில் மிருகங்களை நடிக்க வைத்தார், காரைக்குடி நாராயணன். இதில் ஒரு காட்சி: ஒரு பசு மாட்டிடம் குரங்கு பால் கறந்து, அந்தப் பாலை குழந்தைக்கு புகட்டும்.

    முதலில் இந்தக் காட்சியை படமாக்க முயன்றபோது, குரங்கை மாடு எட்டி உதைக்க அது தூரத்தில் போய் விழுந்தது! பிறகு மிருகங்களை பழக்குபவரிடம் இந்தக் காட்சியை நாராயணன் விளக்க, அவர் பசுவிடம் குரங்கை நன்றாகப் பழக விட்டு இரண்டு பிராணிகளுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார். இரண்டும் சிநேகமான பிறகு, காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டது.

    இந்தப் படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "மிருகங்களை நடிக்க வைத்து அசத்தியிருக்கிறாய்! குட்டி தேவராகிவிட்டாய்!'' என்று பாராட்டினார்.

    ராதிகா, ஜெய்கணேஷ் ஆகியோரின் நடிப்பில், "அன்பே சங்கீதா'' என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார், நாராயணன். இந்தப் படத்தில், இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய "சின்னப்புறா ஒன்று'' என்ற பாடல் அற்புதமாக அமைந்தது.

    படத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், "பிமல்ராய் படம் மாதிரி நன்றாக இருக்கிறது. ஆனால் ஓடாது'' என்றார்.

    நாராயணன் திடுக்கிட்டவராய், "ஏன்?'' என்று கேட்க, "ராதிகா எவ்வளவு இளமையோடு இருக்கிறார்! அவருக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடிப்பதை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்'' என்றார், ஏவி.எம்.

    அவர் கணித்தபடியே, படம் ஓடவில்லை.

    இதன் பிறகு "உன்னிடம் மயங்குகிறேன்'', "நல்லது நடந்தே தீரும்'' ஆகிய படங்களை நாராயணன் தயாரித்து இயக்கினார்.

    "நல்லது நடந்தே தீரும்'' தலைப்பு நன்றாக இருந்தபோதிலும், படம் தொடங்கியது முதல் கெட்ட நிகழ்ச்சிகளே நடந்தன. "தகரா'' என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரேகாவை இதில் அறிமுகப்படுத்தினார். மற்றும் சுமன், பானுசந்தர் ஆகியோர் நடித்தனர். படத்தொடக்க விழாவின்போதே, படத் தயாரிப்புக்கு பணம் போடுவதாகக் கூறியிருந்தவர், பின்வாங்கிவிட்டார். பாரதிராஜா, பட அதிபர் கே.ஆர்.ஜி. ஆகியோர் உதவி செய்ததால், படம் தயாராகி முடிந்தது.

    அதன் பிறகும் பிரச்சினை. படத்தின் சில காட்சிகளுக்காக, தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படத்தை திரையிட முடியாத நிலைமை. அப்போது, தணிக்கைக் குழுவின் தலைமைப் பதவியில் எல்.வி.பிரசாத் இருந்தார். அவரிடம் நாராயணனும், இளையராஜாவும் சென்று முறையிட்டனர். அவர் யோசனைப்படி, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.

    அந்தப் படத்தில் இடம் பெறாமல் போன "நிலாக்காயுதே'' என்ற பாடல், பிறகு கமலஹாசன் நடித்த "சகலகலா வல்லவன்'' படத்தில் பயன்படுத்தப்பட்டது.
    Next Story
    ×