search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மண்ணுக்குள் வைரம்: சிவாஜிகணேசனை வைத்து கோவைத்தம்பி தயாரித்த படம்
    X

    மண்ணுக்குள் வைரம்: சிவாஜிகணேசனை வைத்து கோவைத்தம்பி தயாரித்த படம்

    சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.
    சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.

    கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.

    இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.

    அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.

    கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.

    "அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.

    "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.

    மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.

    இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.

    படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.

    25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.

    1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.

    இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.

    அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார்.

    8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது.

    இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

    என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.

    என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.

    எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''

    இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
    Next Story
    ×