search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகுமாரின் 100-வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    X

    சிவகுமாரின் 100-வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி

    நடிகர் சிவகுமாரின் 100-வது படமான "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'', அவருடைய மாறுபட்ட நடிப்பாலும், மாறுபட்ட கதை அமைப்பாலும் பெரிய வெற்றி பெற்றது.
    நடிகர் சிவகுமாரின் 100-வது படமான "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'', அவருடைய மாறுபட்ட நடிப்பாலும், மாறுபட்ட கதை அமைப்பாலும் பெரிய வெற்றி பெற்றது.

    ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த "புவனா ஒரு கேள்விக்குறி''க்குப் பின் வெளிவந்த சிவகுமாரின் வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' தேவர் தயாரித்த படம். சிவகுமாரும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர். இதில் நடித்த ஒரு ஆடு, அதிசயமான சர்க்கஸ் வேலைகளையெல்லாம் செய்து காட்டியது. படத்தின் வெற்றியில் இந்த ஆட்டுக்குப் பெரும் பங்கு உண்டு.

    இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "ஆட்டுக்கார அலமேலு படம் தயாரிப்பில் இருந்தபோது, தேவர் அண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் கிண்டல் செய்வேன். `என்ன அண்ணா! இந்த ஆடு, ரேடியோ வைக்குது. சண்டை போடுது! மனிதன் செய்ய முடியாத சாகசத்தையெல்லாம் செய்யுது. இதை மக்கள் நம்புவாங்களா?' என்று கேட்பேன்.

    "அட போப்பா! ஏராளமான மாயாஜாலப் படங்களை, விட்டலாச்சாரியா எடுத்து வெளியிடறார். அதில் எத்தனையோ நம்ப முடியாத காட்சிகள் வருது. அதை மக்கள் எப்படி ரசிக்கிறாங்க... இந்தப் படத்தை எப்படியோ அடிச்சு பிடிச்சு வெளியிடுவோம். பிறகு நல்ல கதையா எடுப்போம்'' என்று தேவர் அண்ணன் பதில் கூறுவார்.

    1977-ல் வெளிவந்த படங்களில், இந்தப்படம்தான் வசூலில் முன்னிலை வகித்தது.

    தேவர் அண்ணனின் நிறுவனம் கிட்டத்தட்ட 50 படங்களைத் தயாரித்தது. அவற்றில் வெள்ளி விழா கண்ட முதல் படம் ஆட்டுக்கார அலமேலுதான்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமாரின் 100-வது படமë "ரோசாப்பூ ரவிக்கைக்காரி.'' சிவகுமாரின் நண்பரான திருப்பூர் மணி இதைத் தயாரித்தார். சிவகுமாரின் ஜோடியாக தீபா நடித்தார்.

    இளையராஜா இசை அமைக்க, தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தனர்.

    இந்தப் படத்தில், கள்ளங்கபடமற்ற கிராமத்து இளைஞனாக சிவகுமார் நடித்தார். அவரை மணக்கும் தீபா, நாகரிகத்தில் நாட்டம் கொண்ட பெண். சந்தர்ப்ப சூழ்நிலையினால், வழி தவறிச் சென்று, கணவனுக்கு துரோகம் செய்கிறாள்.

    மாறுபட்ட கதை அம்சம் கொண்ட இந்தப்படம், சிவகுமாரின் 100-வது படம் என்ற சிறப்புக்கு ஏற்ப வெற்றிப்படமாக அமைந்தது.

    படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "சிவாஜியின் நிழலையே பார்த்து, அதன் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்ட எனக்கு, நிஜத்திடம் ஆசீர்வாதம் பெறத் தோன்றியது. 500 ரூபாய்க்கு மாலை வாங்கிக்கொண்டு, சிவாஜி வீட்டுக்கு சென்றேன்.

    சாதாரணமாக நான் யார் காலிலும் விழுபவன் அல்ல. அன்று, என் நடிப்பின் குருநாதர் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அப்படியே அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

    "எனக்கு எதுக்குடா மாலை? நான்தான் உனக்குப் போடணும்'' என்றார்.

    "வரம் கேட்க வரும் பக்தன்தான் கடவுளுக்கு மாலை போடணும். நான் உங்களிடம் கேட்கும் வரம் ஆசீர்வாதம்'' என்றேன்.

    உடனே சிவாஜி, "டேய், சிவா! உன்னை யாரும் வெறுக்கமுடியாதுடா... உனக்கு விரோதியே இருக்க மாட்டான்டா...! நல்லா இரு!'' என்று வாழ்த்தினார்.

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.

    சிவகுமாரின் 100-வது படத்தின் 100-வது நாள் விழா, சிவாஜிகணேசன் தலைமையில் நடந்தது.

    இதே காலக்கட்டத்தில் சிவகுமாரும், ஷோபாவும் ஜோடியாக நடித்த "ஏணிப்படிகள்'' வெளிவந்தது.

    இந்தத் தரமான படம், வசூலிலும் வெற்றி பெற்றது.
    Next Story
    ×