மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும் 5 பழக்கங்கள்
1. பாராட்ட தயங்க வேண்டாம்
உங்கள் துணை ஏதாவதொரு செயலை சிறப்பாக செய்து முடித்திருந்தால் அவரை மனதார பாராட்டுங்கள். உங்கள் மனதுக்குள் பாராட்டாமல், வார்த்தைகளால் சத்தமாக வெளிப்படுத்துங்கள்.
உங்களின் உண்மையான பாராட்டு உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஒருவருக்கொருவர் நேர்மறையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வது இல்லற வாழ்வுக்கு இனிமை சேர்க்குமே தவிர பாதகமாக மாறாது.
2. ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிடாதீர்கள்
மகிழ்ச்சியான தம்பதியர் பொதுவெளியில் ஒருவரையொருவர் குறை கூறி விமர்சிப்பதில்லை, குறைத்தும் மதிப்பிடுவதில்லை.
நண்பர்களிடம்,உறவினர்களிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது துணை கூறும் விஷயத்தில் சிறு தவறு இருக்கலாம்.மற்றவர்கள் முன்னிலையில் அந்த தவறை சுட்டிக்காட்ட முயற்சிக்க மாட்டார்கள்.
துணையின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக இருந்தாலும் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள். அந்த இடத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்.
தனிமையில் இருக்கும்போது தவறை சுட்டிக்காட்டி அடுத்த முறை அவ்வாறு பேசாமல் இருப்பதற்கு அறிவுறுத்துவார்கள். இந்த நிலைப்பாடு கருத்து மோதல்களை தவிர்க்க உதவிடும். மற்றவர்கள் முன்னிலையில் ஈகோ பிரச்சினை தலை தூக்குவதை தடுத்துவிடும்.
3. கவனக்குறைவை தவறாக கருத வேண்டாம்
மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதற்கும், கவனக்குறைவாக செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்திருப்பார்கள்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் தன் துணை கவனக்குறைவாக செயல்பட்டால் அது குறித்து கடுமையாக விமர்சிக்கமாட்டார்கள்.
4. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காதீர்கள்
தாங்கள் தங்கள் துணை மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்.
சில தம்பதிகள் மோதலில் ஈடுபடும்போது செய்யும் மிகப்பெரிய தவறு, உணர்ச்சிவசப்படுவதுதான். அந்த உணர்ச்சிகள் ஆக்ரோஷமாக, கோபமாகவே வெளிப்படும். மென்மையான அணுகுமுறையாக இருக்காது.
யார் முதலில் சமாதானமாக செல்வது என்று இருவரும் தயங்கினால், அந்த சந்தர்ப்பத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தால் அது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும்.
இருவருக்கும் இடையேயான நெருக்கம் குறைவதற்கு வழிவகுத்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் இருவரும் அன்யோன்யமாக செயல்படுவது இல்லற வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சிக்குரியதாக மாற்றும்.
5. மன்னிப்பு கேட்பது நல்லது
உங்கள் துணையுடன் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உடனடியாக இல்லாவிட்டாலும், காலம் தாழ்த்தாமல் மன்னிப்பு கேட்டுவிடுவது நல்லது.
உங்கள் தரப்பில் நியாயம் இருக்கலாம். ஆனால் வாக்குவாதத்தை முதன் முதலில் தொடங்கியது நீங்கள்தான் என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரியானது.
தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது இரண்டாம் பட்சம்தான். அதனை நிதானமாக விளக்கி புரிய வைக்கலாம். ஆனால் வாக்குவாதத்திலோ, கடும் மோதலிலோ ஈடுபட்டுவிட்டு துணையுடன் பேசாமல் இருப்பது நல்லதல்ல.
அன்றைய நாளின் இறுதிக்குள்ளாவது மன்னிப்பு கேட்டு அவரை இயல்பு நிலைக்கு திருப்பிவிட வேண்டும். புண்பட்ட அவரது உணர்வுகள் மனக்கவலையாக மாறுவதற்கு முன்பு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.
மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருப்பதில்லை.
துணையை எப்படி சமாதானப்படுத்தலாம், எந்த சமயத்தில் மன்னிப்பு கேட்கலாம் என்பதெல்லாம் அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் உறவுக்குள் விரிசல் ஏற்பட விடாமல் பார்த்துக்கொள்வார்கள்.