Thandakaaranyam(2.5 / 5)
கதைகளம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வசித்து வருகிறார். தம்பி கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். இவர் எப்படியாவது நிரந்தர அரசு ஊழியராகி விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார்.
ஆனால், அண்ணன் தினேஷுக்கும், உயர் அதிகாரிக்கும், இடையே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் கலையரசன் தற்காலிக வேலையை இழக்கிறார். எப்படியாவது கலையரசனுக்கு அரசு வேலை வேண்டும் என்பதற்காக நிலத்தை விற்று, மத்திய அரசு மறைமுகமாக நடத்தி வரும் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் சேர்க்கிறார். அங்கு கலையரசனுக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
இறுதியில் கலையரசனுக்கு வந்த பிரச்சனைகள் என்ன? அரசு வேலை கிடைத்ததா? குடும்ப ஆசையை கலையரசன் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தினேஷ், பழங்குடியின மக்களின் பிரதிபலிப்பாக நடித்து இருக்கிறார். அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுப்பது, வில்லனிடம் அடிவாங்குவது, மனைவியுடன் பாசம், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்து இருக்கும் கலையரசன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். படத்திற்காக அதிக உழைப்பை கொடுத்திருப்பது சிறப்பு. காதலி, குடும்பம், அரசு வேலை என கதையை தாங்கி நிற்கிறார்.
தினேஷ் மனைவியாக வரும் ரித்விகா, தினேஷை போலீஸ் பிடித்து செல்லும் காட்சி, காட்டுக்குள் தினேஷ் செல்லும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். வின்சு சாம், பால சரவணன், சபீர் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
உண்மை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. நக்சலைட் என்பவர்கள் யாரும் இல்லை. அரசாங்கத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி திரைக்கதை பார்க்கும் போது டானா காரன், விடுதலை படங்களின் நியாபகம் வருகிறது. இரண்டாம் பாதி மத்திய சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய அரசு எப்படி இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறார். ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் மக்களை என்ன செய்கிறார்கள் என்பதை படமாக்கி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவு, அடர்ந்த காட்டு பகுதியையும், மலை பகுதியையும் அழகாக படம் பிடித்து இருக்கிறது.
தயாரிப்பு
நீலம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

