இனி போன் நம்பர் தேவையில்லை! யூசர் நேம் போதும்! வாட்ஸ்அப் அப்டேட்

இதற்கான முன்பதிவு இந்த வாரம் முதல் தொடங்குகிறது.
 WhatsApp Privacy Update
Published on

இனி உங்கள் போன் நம்பரை யாருக்கும் தராமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ய முடியும்.

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் 'யூசர் நேம்' என்ற புதிய அதிரடி வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய மாற்றம்..

இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் பேச வேண்டும் என்றால், மொபைல் எண் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இனி இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களைப் போல ஒரு தனித்துவமான ‘யூசர் நேம்’ உருவாக்கிக் கொள்ளலாம்.

பெரிய வாட்ஸ்அப் குரூப்களில் நீங்கள் இணையும்போது உங்கள் போன் நம்பர் யாருக்கும் தெரியாது.

உங்களுக்குத் தெரியாத புதிய நபர்களுக்கு நீங்கள் முதன்முதலில் மெசேஜ் அனுப்பும்போது, உங்கள் போன் நம்பர் மறைக்கப்பட்டு யூசர் நேம் மட்டுமே காட்டப்படும்.

இது எப்படிச் செயல்படும்?

நாம் உருவாக்கும் யூசர்நேம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். மற்ற சமூக ஊடகங்களைப் போல வாட்ஸ்அப்பில் யாரையும் யூசர் நேம் கொண்டு தேடிக் கண்டுபிடிக்க முடியாது. துல்லியமான யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

புதியவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த 'யூசர் நேம் கீ' என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் உண்டு.

இந்த ‘கீ’ இருந்தால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

பதிவு செய்யும் முறை..

உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்துவிட்டு செட்டிங் பகுதிக்கு சென்று, அக்கௌன்ட் என்பதை தேர்வு செய்து, யூசர் நேம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நமக்கு பிடித்த பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளதால், ஒரே மாதிரியான பெயர்கள் பலருக்கு இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, தங்களுக்குப் பிடித்த பெயர்களைப் பயனர்கள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வாட்ஸ்அப் அனுமதி அளித்துள்ளது.

பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு..

நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, சில முக்கிய பெயர்களை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் தங்களின் அதே யூசர்நேம்களை வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்திக் கொள்ள வணிக நிறுவனங்களுக்கும், படைப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

இதற்கான முன்பதிவு இந்த வாரம் முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த வசதி படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com