

உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றாக எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உலகளவில் முடக்கத்தை சந்தித்துள்ளது.
இணைய கண்காணிப்பகமான டவுன்டிடக்டர் தரவுகளின்படி, இந்த முடக்கம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது. பல பயனர்கள் தங்கள் கணக்கை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
காலை மணி 9.54 சுமாருக்கு அமெரிக்காவில் மட்டும் 34,000 பேர் தங்கள் கணக்கை அணுக முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.
கனடாவில் 3200 பேர், பிரிட்டனில் 8700 பேர், தென் கொரியாவில் 340 பேர் இதுபோல புகாரளித்துள்ளனர்.
புகாரளித்தவர்களை தவிர்த்து உலகின் பிற இடங்களிலும் பலர் எக்ஸ் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனை பிற சமூக ஊடகங்களில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
பின்னர் மதியம் வாக்கில் சிக்கல் சரி செய்யப்பட்டு எக்ஸ் அணுகல் மெல்ல மெல்ல சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் வலைத்தளம் மற்றும் செயலி அண்மைக் காலமாக பல முறை முடக்கத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.