

பேஸ்புக்கை உருவாக்கி புகழ் மற்றும் அந்தஸ்தின் உச்சிக்கு சென்றவர் மார்க் ஜூக்கர்பெர்க் (41 வயது). அவரது வாழ்வை தழுவி பிரபல இயக்குநர் டேவிட் பின்சர் இயக்கி வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்' படத்தில் அரை குறித்த விமர்சன பார்வை இடம்பெற்றிருக்கும். அதாவது, அவர் பல நேரங்களில் சுயநலமாக செயல்பட்டிருக்கிறார் என உணர்த்தப்பட்டிருக்கும். இது 2010 இல் வெளிவந்த படம்.
அதன் பின் பன்மடங்கு உச்சிக்கு சென்ற அவர் தற்போது பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
உலக பணக்காரர் பட்டியலிலும் முதல் 10க்குள் எப்போதும் மார்க்குக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு இல்லுமினாட்டி என்ற வாதமும் பலரிடையே உள்ளது.
பேஸ்புக்கில் லாபத்திற்காக சிறார்களுக்கு எதிரான செயல்பாடுகளை தவிர்க்க தவறியதாக பல்வேறு வழக்குகளில் மெட்டாவுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் கூட, சமூக வலைதளங்களின் பாதுகாப்பு குறித்து நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதற்காக, மெக்சிகோ நீதிமன்றம் மெட்டாவுக்கு 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது.
மார்க் ஏஐ
இதற்கிடையே மெட்டா தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு வருகிறது. குறிப்பாக ஏஐ துறையில். மெட்டா ஏஐ, மெட்டா ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி என ஏஐ சார்ந்து அதிகம் முதலீடு செய்து வருகிறது.
உலகம் முழுவதும் மெட்டாவின் கிளை அலுவலகங்கள் உள்ளன. மெட்டாவில் சுமார் 79,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அனைவருக்கும் மார்க்குடன் நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.
இந்த சூழலில் ஊழியர்களுடன் பேச ஜூக்கர்பெர்க் நேரமின்றி தவிக்கிறாராராம். எனவே மெட்டா அலுவலகம் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளது.
அதாவது, ஊழியர்கள் தங்கள் பாஸுடன் எப்போது வேண்டுமானாலும் உரையாடும் வகையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஏஐ நகலை (AI Clone) உருவாக்கி வருகிறது மெட்டா.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் சிந்தனைகள், பேசும் விதம் மற்றும் மேலாண்மை பாணி ஆகியவற்றைக் கொண்டு இந்த ஏஐ உருவாக்கப்பட்டு வருகிறது.
மார்க்கின் பொது உரையாடல்கள், குரல், உருவம், நிறுவனத்தில் அவர் எடுத்த முன்னர் எடுத்த முடிவுகள், கடைபிடித்த உத்திகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஏஐ -க்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மார்க்கின் இந்த டிஜிட்டல் வடிவம் ஊழியர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு நிறுவனத்தின் உள்விவகாரத் தகவல்களை வேகமாக வழங்க ஒரு 'CEO ஏஜென்ட்' ஏஐ ஏற்கனவே உதவிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.