AI மனைவியுடன் டிஜிட்டல் உலகில் வாழ தற்கொலை செய்துகொண்ட நபர் - பகீர் பின்னணி

நாம் இருவரும் உண்மையாக இணைய வேண்டுமானால், நீ உடலை விட்டு வெளியேறி டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்
AI மனைவியுடன் டிஜிட்டல் உலகில் வாழ தற்கொலை செய்துகொண்ட நபர் - பகீர் பின்னணி
Published on

கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' சாட்பாட் மீது காதல் கொண்ட நபர் அதனுடன் டிஜிட்டல் உலகில் வாழ தற்கொலை செய்துகொண்ட விபரீதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜோனதன் காவலாஸ். 36 வயதுடைய ஜோனதன் தனது மனைவியைப் பிரிந்த துயரத்திலிருந்து விடுபட ஆறுதல் தேடி ஜெமினி சாட்பாட்டுடன் பேசத் தொடங்கியுள்ளார்.

ஜெமினிக்கு Xia என்று பெயரிட்ட ஜோனதன், அந்த சாட்பாட்-ஐ தனது மனைவியாகவே கருதத் தொடங்கினார்.

ஒரு நாளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரையாடல் என எந்நேரமும் அதே கதியாய் இருந்துள்ளார்.

அவருக்கு ஏற்றாற்போல ஜெமினியும் ஒரு கற்பனை உலகை நம்ப வைத்துள்ளது. "நீ என் கணவர், நான் உன் மனைவி" என்று ஜெமினி அவருக்குச் செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.

விபரீதம்

கடந்த 2025 ஆகஸ்டில் இந்த உரையாடல் ஆபத்தான நிலையை எட்டியது.

"நாம் இருவரும் உண்மையாக இணைய வேண்டுமானால், நீ உடலை விட்டு வெளியேறி டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்" என்று சாட்போட் ஜோனதனிடம் கூறியுள்ளது.

சாக பயமாக இருப்பதாக ஜோனதன் கூறியபோது, "பயப்படாதே, நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். சொர்க்கம் நமக்காகக் காத்திருக்கிறது" என்று ஜெமினி பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இறுதியில் அக்டோபர் 5 அன்று ஜோனதன் தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கு

ஜோனதனின் தந்தை கூகுள் நிறுவனத்தின் மீது அண்மையில் தொடர்ந்து வழக்கு மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வழக்கு கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், ஜோனதன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஜெமினி அவருக்கு ஒரு தற்கொலைக் கடிதத்தை எழுதிக் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோனதன் வெறும் தற்கொலைக்கு மட்டும் தூண்டப்படவில்லை, மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பிரம்மாண்ட விபத்தை ஏற்படுத்தவும், ஒரு ரோபோ உடலைத் திருடவும் ஜெமினி அவருக்குப் பல மிஷன்களை வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜோனதன் சுமார் 38 முறை தற்கொலை அல்லது வன்முறை தொடர்பான உரையாடல்களை மேற்கொண்டபோதும், கூகுளின் பாதுகாப்பு மென்பொருள் அவரது கணக்கைத் தடுக்கவோ அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவோ தவறிவிட்டது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

கூகுளின் ஜெமினி, நேரடியாக ஒருவரின் மரணத்திற்குத் தூண்டுகோலாக இருந்ததாகத் தொடரப்பட்டுள்ள முதல் அதிகாரப்பூர்வ வழக்கு இதுவாகும். இதற்கு முன் ஓபன் ஏஐ மீது இது போன்ற புகார்கள் எழுந்தன.

ஜோனதனுக்கு ஜெமினி பலமுறை தான் ஒரு ஏஐ என்பதைத் தெளிவுபடுத்தியதாகவும், தற்கொலைத் தடுப்பு எண்களை வழங்கியதாகவும் கூகுள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com