சர்வம் AI மயம்: ரூ.55,00,000 கோடிக்கு அடிபோடும் அமேசான்.. 16,000 ஊழியர்கள் பணிநீக்கம் - அது என்ன Project Dawn ?
உலகின் முதன்மை இகாமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக அமேசான் உள்ளது.
அண்மை காலமாக அமேசான் பெரும் அளவில் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
இந்நிலையில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெகா லே ஆப் திட்டத்தை அமேசான் அறிவித்துள்ளது.
இதற்கு பின்னால் ஒரு சர்ச்சையும் உள்ளது. அதாவது, இந்த பணிநீக்கங்களை அமேசான், Project Dawn என்ற ஒரு ரகசிய திட்டத்தின் கீழ் செய்து வருகிறது.
Project Dawn தொடர்பான மின்னஞ்சல் ஒன்று தற்செயலாக ஊழியர்களுக்கு முன்னரே கசிந்ததால் நிறுவனத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
அமேசான் தனது எதிர்காலத்தை முழுமையாக ஏஐ தொழில்நுட்பத்தை சார்ந்தே கட்டமைக்க தொடங்கிவிட்டது.
1.5 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட அமேசான், ஏஐ உதவியுடன் குறைந்த மனிதவளத்தைக் கொண்டு வேகமாகச் செயல்படத் திட்டமிடுகிறது.
குறிப்பாக அந்நிறுவனத்தின் கிளவுட் சேவையான, அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) பிரிவில் அமேசான் முழு கவனம் செலுத்தி வருகிறது.
நிறுவனங்கள் தங்களின் ஏஐ மாடல்களை இயக்கவும், தரவுகளைச் சேமிக்கவும் சக்திவாய்ந்த கிளவுட் சிஸ்டம்களை நாடுகின்றன. அந்த தேவையைப் பூர்த்தி செய்வதில் AWS முதலிடத்தில் இருக்க விரும்புகிறது.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி அடுத்த 10 ஆண்டுகளில் AWS பிரிவு ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று முன்பு கணித்திருந்தார்.
ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இந்த இலக்கு இரண்டு மடங்காக (600 பில்லியன் டாலராக) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.55,00,000 கோடி ஆகும்.
2025 ஆம் ஆண்டில் AWS பிரிவு 19% வளர்ச்சி கண்டு 128.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த சூழலில் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு பின்னாலும் ஏஐ தான் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

