கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை மீண்டும் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம்

விசா மற்றும் மாஸ்டர்கார்டு அட்டைகளில் பணம் சேர்ப்பதற்கான ஆதரவு படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
Apple Restores Card Payments
Published on

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் செயலிகளை வாங்குவதற்கும், சந்தா பரிவர்த்தனைகளுக்கும், க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஆதரவை மீண்டும் செயல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டை பரிவர்த்தனை tokenisation வழிகாட்டுதல்களை ஆப்பிள் இப்பொழுது முழுமையாக பின்பற்றுகிறது.

தற்போது, ​​மாஸ்டர்கார்டு மற்றும் விசா நெட்வொர்க்குகளில் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, ஆப்பிள் கணக்கில் பணம் சேர்ப்பதற்கான கட்டண முறையாக அமைக்கலாம்.

அதன் மூலம், ஆப் வாங்குதல்கள் மற்றும் iCloud+ உள்ளிட்ட தொடர் சந்தாக்களுக்குப் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, ஆப் ஸ்டோரில் நேரடியாகப் பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாது, அவற்றிற்கு ஆப்பிள் கணக்கு வாலட் மூலமாகவே பணம் செலுத்த வேண்டும்.

விசா மற்றும் மாஸ்டர்கார்டு அட்டைகளில் பணம் சேர்ப்பதற்கான ஆதரவு, படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும் வரும் நாட்களில் அனைத்து ஆப்பிள் கணக்குகளுக்கும் இந்த அணுகல் திறக்கப்படும்.

ஆப்பிள் பே என்பது ஒரு டிஜிட்டல் பேமெண்ட் முறையாகும். இது பயனர்கள் தங்கள் ஐபோனைப் பேமெண்ட் டெர்மினல்களில் ஸ்கேன் செய்து, நேரடியாக கடைகளில் பொருட்களை வாங்கவும், ஷாப்பிங் வலைத்தளங்களில் பணம் செலுத்துவதற்கும் இணைக்க அனுமதிக்கிறது.

ரிசர்வ் வங்கி, iCloud+ அல்லது Apple Music போன்ற சந்தாக்களுக்கான தானியங்கிப் பற்றுக்களைக் கடுமையாக ஒழுங்குபடுத்துகிறது.

இந்தச் செயல்முறைக்கு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் OTP அல்லது ஒருமுறை கடவுச்சொல் போன்ற கூடுதல் காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்வது அவசியமாகும்.

மேலும், ஒரு பரிவர்த்தனை தானாகச் செயல்படுத்தப்படுவதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே, வரவிருக்கும் பரிவர்த்தனை குறித்து வங்கிகள் பயனருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், ஆரம்ப அமைப்பிற்குப் பிறகு ₹ 15,000 வரையிலான பரிவர்த்தனைகள் OTP இல்லாமல் தானாகவே செயல்படுத்தப்படும் என்றாலும், அதைவிட அதிகமான தொகைகளுக்குப் பயனரின் அங்கீகாரம் தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com