

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது என இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நீதித்துறை அதிகரிகள் மாநில மாநாட்டில் பேசிய சூர்யகாந்த், நீதித்துறையில் ஏஐ பயன்பாடு குறித்து கீழ்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.
"நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் வரவு குறித்து அச்சப்படத் தேவையில்லை, ஆனால் அதன் வரம்புகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
தொழில்நுட்பம் என்பது சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும், தரவுகளைத் திரட்டுவதற்கும் மட்டுமே பயன்படும். இது ஒருபோதும் மனித நீதிபதிகளுக்கு மாற்றாக அமையாது.
சிக்கலான வழக்குகளைத் தீர்க்கும்போது ஒரு நீதிபதி எடுக்கும் முயற்சி மற்றும் அந்தத் தீர்ப்பை எட்டிய பிறகு அவருக்கு ஏற்படும் மனநிறைவு ஆகியவற்றை ஏஐ-ஆல் ஒருபோதும் உணர முடியாது.
ஏஐ ஏற்கனவே உள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் விவேகம் மற்றும் பகுத்தறியும் திறன் ஏஐக்கு கிடையாது.
ஒரு வழக்கை விசாரிக்கும்போது அறநெறி விழுமியங்கள், சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் ஆகியவற்றை மனிதர்கள் கருத்தில் கொள்வார்கள். உணர்ச்சிகளற்ற ஏஐ-ஆல் இந்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முடியாது.
உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாமே தவிர, முடிவெடுக்கும் அதிகாரத்தை அதனிடம் ஒப்படைக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கை பட்டியலிடுதல் உள்ளிட்ட சில நிர்வாக செயல்பாடுகளில் மனிதர்களுக்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அண்மையில் சூர்யகாந்த் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.