

ஸ்மார்ட்போன் சந்தையில் அளவில் பெரிய பேட்டரி கொண்ட மாடல்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் 7000mAh தொடங்கி அதிகபட்சம் 10,000mAh வரையிலான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் வழக்கமாகி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் நிறுவனம் மிக அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் ஹானர் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மாரட்போன் அதிகபட்சம் 14,000mAh பேட்டரி கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹானர் நிறுவனம் 11,000mAh பேட்டரி கொண்ட X80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்திருந்தது.
இந்த வரிசையில், புதிய ஸ்மார்ட்போன் இருக்கும் என்றும் இதன் எடை 220 கிராம்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் சந்தையில் கிடைக்கும் வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை விட இந்த மாடல் அதிக எடை கொண்டதாக இருக்கும்.
எனினும், சில பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடல்களை விட எடை குறைவாகவே இருக்கும். தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 214 கிராம்களும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் 233 கிராம் எடை கொண்டுள்ளன.