

நத்திங் நிறுவனம் தனது அடுத்த சாதனத்தின் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் சி.எம்.எஃப். பிரான்டிங்கில் புது ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படாது என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. உபகரணங்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நத்திங் நிறுவனம் “(b)” பெயரை குறிப்பிட்டு டீசர்களை வெளியிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நத்திங் (4b) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும என்று தெரிகிறது.
நத்திங் சமீபத்தில் அறிமுகம் செய்த நத்திங் போன் (4a) மற்றும் (4a) ப்ரோ மாடல்களுடன் புதிய நத்திங் (4b) மாடலும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் புதிய மிட்-ரேஞ்ச் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு நத்திங் நிறுவனம் பிளாக்ஷப் ஸ்மார்ட்போன் எதையும் அறிமுகம் செய்யாத நிலையில், அந்நிறுவனம் "a" சீரிஸ் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
முற்றிலும் புதிய “(b)” சீரிஸ் ஸ்மார்ட்போன் புதுப்பிக்கப்பட்ட மிட் ரேஞ்ச் மாடலாக இருக்கும். இதில் சிறப்பான க்ளிஃப் இன்டர்பேஸ், சிறப்பான கேமரா, நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனாக இல்லாத பட்சத்தில் (b) சீரிசில் வெளியாகும் சாதனம் இயர்போன் மாடலகவும் இருக்கலாம் . வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும்.