

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி 12-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை மீண்டும் வீழ்த்தி 7- வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே. 2 முறை மும்பையையும் (103 ரன், 8 விக்கெட்), டெல்லியையும் (23ரன், 8 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. கொல்கத்தாவை 32 ரன்னிலும், லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் ( 8 விக்கெட்), பஞ்சாப் (5 விக்கெட்) , பெங்களூரு (43 ரன்) , ஐதராபாத் (10 ரன்) , குஜராத் ( 8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க ஒவ்வொரு போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் தொடர்ந்து நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் லக்னோவை ஏற்கனவே தோற்கடித்து இருந்தது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சி.எஸ். கே. சமபலத்துடன் திகழ்கிறது. சஞ்சு சாம்சன் (430 ரன்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (251) கார்த்திக் சர்மா, உர்வில் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
உர்வில் படேல் கடந்த போட்டியில் 13 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும் பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோரும் அதிரடியாக விளையாடுபவர்கள்.
பந்துவீச்சில் அன்சுல் கம்போஜ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஓவர்டன் (14), நூர் அகமது (12), அகீல் உசேன், முகேஷ் சவுத்ரி போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணி சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோ 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
லக்னோ அணியின் பேட்டிங்கில் மிச்சேல் மார்ஷ் ( 371 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட், மர்க்ராம் ஆகியோரும், பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் (16 விக்கெட்), மோஷின் கான், முகமது ஷமி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 8- வது ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 7 போட்டியில் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.