

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் லக்னோவை இன்று சந்திக்கிறது.
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் லக்னோவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதுகிறது.
சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (2 முறை டெல்லி, கொல்கத்தா, 2 முறை மும்பை, லக்னோ அணிகளுக்கு எதிராக). 5 தோல்வியுடன் (ராஜஸ்தான், பஞ்சாப். பெங்களூரு, ஐதராபாத். குஜராத் அணிகளுக்கு எதிராக) 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அந்த உத்வேகத்தை தொடர்ந்து 7-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.
சென்னை அணியில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (2 சதம், ஒரு அரைசதம் உள்பட 430 ரன்கள்), ருது ராஜ் கெய்க்வாட் (2 அரைசதத்துடன் 293) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் உர்வில் பட்டேல் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் அரைசதத்தை கடந்து சாதனை படைத்ததுடன் 65 ரன்கள் எடுத்து புதிய நம்பிக்கை அளித்தார். ஷிவம் துபே, டிவால்ட் பிரேவிஸ்சும் பயனுள்ள பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் அன்ஷூல் கம்போஜ் (19 விக்கெட்), நூர் அகமது. அகில் ஹூசைன் கைகொடுக்கின்றனர். காயம் காரணமாக ஜாமி ஓவர்டான் விலகி இருப்பது பின்னடைவாகும்.
லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 8 தோல்வி கண்டு பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது. கடைசி 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.
நிலையற்ற ஆட்டத்தால் நிலைகுலைந்து போய் இருக்கும் லக்னோ அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் (ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 377 ரன்கள்) கேப்டன் ரிஷப் பண்ட் (ஒரு அரைசதத்துடன் 251), மார்க்ரமும், பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ் (16 விக்கெட்), மொஷின் கான், முகமது ஷமி, ஆவேஷ் கானும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 4 நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த முனைப்பு காட்டும். இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் அச்சமின்றி செயல்பட்டு முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், ஆறுதல் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க லக்னோ அணி போராடும். இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகில் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன் அல்லது மேட் ஹென்றி, முகேஷ் சவுத்ரி.
லக்னோ: ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ரம், அக்ஷத் ரகுவன்ஷி, ஷபாஸ் அகமது. ஹிம்மாத் சிங், முகமது ஷமி, ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மொஷின்கான் அல்லது திக்வேஷ் ரதி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.