

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35-வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் - ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ். அந்த அணியின் அதிரடியை டெல்லி சமாளிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி லக்னோ (6விக்கெட்), மும்பை (6விக்கெட்), பெங்களூரு (6விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. குஜராத் (1 ரன்), சென்னை (23ரன்), ஐதராபாத் (47ரன்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது. டெல்லி அணி சொந்த மண்ணில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. மற்றொன்றில் தோற்றது. பஞ்சாப்பின் ஆதிக்கத்தை தடுத்து டெல்லி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
பேட்டிங்கில் சமீர் ரிஸ்வி (209 ரன்), கே.ராகுல் (205), ஸ்டப்ஸ் (196) ஆகியோரும், பந்து வீச்சில் நிகிடி (7விக்கெட்), அக்ஷர் படேல் (6) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றி மற்றும் மழையால் ஒரு புள்ளி என 11 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி குஜராத் (3விக்கெட்), சென்னை (5 விக்கெட்), ஐதராபாத் (6 விக்கெட்), மும்பை (7விக்கெட்), ஐதராபாத் ( 54 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. கொல்கத்தாவுடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் இருக்கிறது.
பேட்டிங்கில் கூப்பர் கனோலி (223 ரன்), பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (தலா 211 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (208 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென் சாஹல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.