IPL 2026 | வாழ்வா- சாவா நெருக்கடியில் கொல்கத்தா அணி- குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா அணி 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
IPL 2026 | வாழ்வா- சாவா நெருக்கடியில் கொல்கத்தா அணி- குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வாழ்வா-சாவா நெருக்கடியுடன் கொல்கத்தா அணி, குஜராத்துடன் இன்று மோதுகிறது.

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை. எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்த போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.

கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ராஜஸ்தான், லக்னோ, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிராக), 6 தோல்வியுடன் (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத், பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

கடந்த ஆட்டத்தில் பெங்களுரூவிடம் தோல்வி கண்டதால் அந்த அணியின் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பு மங்கியது. தனது எஞ்சிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று, மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டும் கைகொடுத்தால் தான் அந்த அணி அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இது அந்த அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாகும். தோற்றால் முற்றிலும் முடிந்து போகும்.

கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் அங்கிரிஷ் ரகுவன்ஷி (4 அரைசதத்துடன் 340 ரன்கள்), ரிங்கு சிங் (2 அரைசதத்துடன் 286), கேமரூன் கிரீன் (264), கேப் டன் ரஹானே (237). பின் ஆலென் (ஒரு சகத்துடன் 228) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கார்த்திக் தியாகி (16 விக்கெட்). சுனில் நரின், வைபவ் அரோரா பலம் சேர்க்கின்றனர்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆடமுடியாமல் போனது அந்த அணிக்கு பலவீனமாக அமைந்தது. அவர் இந்த ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக). 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) கண்டு 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. முதல் 7 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்ட அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை உறுதி செய்து விடும்.

குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதத்துடன் 501 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (4 அரைசதத்துடன் 467), ஜோஸ் பட்லர் (2 அரைசதத்துடன் 355), வாஷிங்டன் சுந்தர் (2 அரைசதத்துடன் 296) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். ராகுல் திவேதியா ஏமாற்றம் அளித்து வருகிறார். பந்து வீச்சில் ககிசோ ரபடா (21 விக்கெட்), ரஷித் கான் (16), பிரசித் கிருஷ்ணா (14), முகமது சிராஜ், ஜாசன் ஹோல்டர் (தலா 13) மிரட்டக்கூடியவர்கள்.

முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் குஜராத் அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் நுழைய முழு திறமையையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி மல்லுக் கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், கொல்கத்தா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

கொல்கத்தா: அஜிங்யா ரஹானே (கேப்டன்). பின் ஆலென், அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ரோமன் பவெல், மனிஷ் பாண்டே, சுனில் நரின், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் ஆரோரா, சவுரப் துபே.

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர் ஷத் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது சாய் கிஷோர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com