ஒரு அகதியின் கைமாறு.. தந்தையின் நாட்டுக்கு எதிராக விளையாடிய வீரர் - கோல் அடித்ததும் செய்த செயல்!

அந்த நாட்டிற்கு திரும்பச் செய்ய வேண்டியது அவனது கடமை.
ஒரு அகதியின் கைமாறு.. தந்தையின் நாட்டுக்கு எதிராக விளையாடிய வீரர் - கோல் அடித்ததும் செய்த செயல்!
Published on

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் F பிரிவு ஆட்டத்தில் துனிசியா - ஸ்வீடன் அணிகள் மோதின.

முதல் பாதி

மெக்சிகோவின் குவாடலூப் நகரில் நடந்த இந்த போட்டியின் 7வது நிமிடத்திலேயே ஸ்வீடன் நட்சத்திர வீரர் யாசின் அயாரி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஸ்வீடன் வசம் 2 கோல்கள் சேர்ந்தன.

ஆனால் முதல் பாதி முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன்பு துனிசியா வீரர் உமர் ரெகிக் கோல் விளாச ஸ்கோர் 2-1 என வந்து நின்றது.

இரண்டாம் பாதி

இரண்டாவது பாதியில் சுதாரித்த ஸ்வீடன் 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 3-1 என வலுவான நிலையை அவ்வணி எட்டியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் 4வது கோல் மற்றும் யாசின் அயாரி அடித்த 5வது கோல் என அணியின் கோல் கணக்கு 5 ஆக உயர, 5-1 என்ற புள்ளிகணக்கில் துனிசியாவை வீழ்த்தி ஸ்வீடன் வெற்றி பெற்றது.

யாசின் அயாரி

கடந்த 2018 தொடரில் ஆடிய ஸ்வீடன் 2022 இல் தகுதி பெறவில்லை. இதனால் சுமார் 8 ஆண்டுகள் கழித்து அதாவது சரியாக 2,893 நாட்களுக்குப் பிறகு உலகக்கோப்பையில் ஸ்வீடன் அணி பங்கெடுத்தது.

ஸ்வீடன் சார்பாக ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கோல் அடித்தவர் 22 வயதான யாசின் அயாரி.

அத்துடன் ஸ்வீடன் வரலாற்றில் மிக இளவயதில் உலகக்கோப்பையில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அவர் கோல் அடித்தவுடன் சக வீரர்கள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும் யாசின் ஆயாரி எவ்வித கொண்டாடத்திலும் ஈடுபடாமல் அமைதியாக காணப்பட்டார். அவர் கொண்டாட்டங்களை வெளிப்படையாக தவிர்த்துள்ளார்.

அகதி

யாசின் ஸ்வீடனில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் அவரின் தந்தை அஸ்ஸூஸ் அயாரி துனிசிய நாட்டவர் ஆவார். யாசினின் தாய் மொராக்கோவை சேர்ந்தவர்.

எனவே யாசின் அயாரிக்கு மொத்தம் மூன்று நாடுகளின் சார்பில் விளையாடும் தகுதியும் வாய்ப்பும் கிடைத்தது. யாசினுக்கு துனிசியா அணியில் வாய்ப்பு வந்தபோது அவர் அதை ஏற்க நினைத்தார்.

ஆனால் யாசினின் தந்தை அவரை தடுத்துள்ளார். இதுகுறித்து யாசினின் தந்தை முன்னர் அளித்த பேட்டியில்,

"என் மகனுக்குத் துனிசியாவுக்காக விளையாடத்தான் ஆசை இருந்தது. ஆனால், நான்தான் அவனை ஸ்வீடன் நாட்டின் சார்பில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டேன்.

ஏனெனில் அகதியாக வந்த எங்களை அன்போடு வரவேற்று என் மகனின் திறமையை அடையாளம் கண்டு அவனை இந்தளவிற்கு வளர்த்தெடுத்தது ஸ்வீடன் தான்.

எனவே அந்த நாட்டிற்கு திரும்பச் செய்ய வேண்டியது அவனது கடமை" என தெரிவித்திருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com