உலகக் கோப்பை கால்பந்து தகுதிக்கான ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் இத்தாலி, வடக்கு அயர்லாந்துடன் மோதுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து தகுதிக்கான ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்
Published on

மிலன்:

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று இன்று முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த முறை ஐரோப்பிய கண்டத்துக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் தகுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இங்கிலாந்து உள்பட 12 அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.

அதே சமயம் தகுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 2-வது இடத்தை பிடித்த சுலோவக்கியா, கொசோவா, டென்மார்க், உக்ரைன், துருக்கி, அயர்லாந்து, போலந்து, போஸ்னியா, இத்தாலி, வேல்ஸ், அல்பேனியா, செக்குடியரசு மற்றும் ஐரோப்பிய நேஷன்ஸ் லீக்கில் வெற்றி பெற்ற ருமேனியா, சுவீடன், வடக்கு மாசிடோனியா, வடக்கு அயர்லாந்து ஆகிய 16 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.

இவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதி அதில் வெற்றியாளராக உருவெடுக்கும் அணி உலகக் கோப்பை போட்டிக்குள் நுழையும்.

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இத்தாலி அரைஇறுதியில் வடக்கு அயர்லாந்து அணியை தனது சொந்த ஊரான பெர்காமோவில் உள்ள கெவிஸ் ஸ்டேடியத்தில் இன்று சந்திக்கிறது. கடந்த இரண்டு உலகக் கோப்பைகளை தவற விட்ட இத்தாலி அணி கடும் நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்குகிறது. இவ்விரு அணிகளும் சர்வதேச போட்டியில் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இத்தாலியும், ஒன்றில் வடக்கு அயர்லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 ஆட்டங்கள் 'டிரா' ஆனது.

இத்தாலி பயிற்சியாளர் ஜெனரோ கேட்சோ கூறுகையில் எங்களது இலக்கை அடைய முடியும் என்று உறுதியாக நம்பகிறேன் இந்த வீரர்கள் குழு அதற்கு தகுதியானது' என்றார். இதே பிரிவில் மற்றொரு அரைஇறுதியில் வேல்ஸ்-போஸ்னியா அணிகள் மோதுகின்றன. அரைஇறுதியில் வெற்றி காணும் அணிகள் 31-ந்தேதி இறுதி சுற்றில் சந்திக்கும். 'பி' பிரிவில் அங்கம் வகிக் கும் உக்ரைன் அணி அரைஇறுதியில் சுவீடனுடன் மல்லுகட்டுகிறது.

இதே காலக்கட்டத்தில் கண்டங்களுக்கான 'பிளே-ஆப்' சுற்று மெக்சிகோவில் நடத்தப்படுகிறது. இதில் இருந்து இரு அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இதன் ஒரு அரைஇறுதியில் நியூ கலிடோனியா- ஜமைக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் காங்கோவுடன் மோதும்.

இதே போல் பொலிவியா- சுரினாம் இடையிலான அரைஇறுதியில் வெற்றி பெறும் அணி 31-ந்தேதி ஈராக்கை இறுதிப்போட்டியில் சந்திக்கும். வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் தங்களுக்குரிய ஆட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று ஈராக் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) திட்டமிட்டபடி இந்த ஆட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. 'பிபா' ஏற்பாட்டின் பேரில் தனி விமானத்தில் ஜோர்டான் வழியாக மெக்சிகோ சென்றடைந்த ஈராக் வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com