உலகக் கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட போர்ச்சுகல்... 5-0 கணக்கில் அபார வெற்றி

முதல் பாதியிலேயே போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட போர்ச்சுகல்... 5-0 கணக்கில் அபார வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் துவக்கம் முதலே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

போர்ச்சுகல் அணி துவக்கம் முதலே கோல் அடிக்க முனைப்பு காட்டியது. இதற்கு பலனளிக்கும் வகையில் 6-ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் தனது கோல் கணக்கை தொடங்கியது. ஜௌ கேன்செலோ அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.

முதல் பாதியில் முன்னிலை:

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி மற்றொரு கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் நுனோ மென்டெஸ் கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 2-0 என தனது ஆதிகத்தை தொடர்ந்தது.

பிறகு ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணிக்கு மற்றொரு கோல் அடிக்க போர்ச்சுகல் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. புர்னோ வழங்கிய அசிஸ்ட் ரொனால்டு தனது 2-ஆவது கோல் அடிக்க காரணமாக அமைந்தது.

போர்ச்சுகல் அபாரம்:

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சரியாக 60-ஆவது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணியின் அப்துவோஹிட் ஓன் கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 4-0 என முன்னேற்றம் கண்டது. பிறகு ஆட்டத்தின் 87-ஆவது நிமிடத்தில் ரஃபேல் லௌ கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 5-0 என முன்னேறியது.

ஆட்டத்தின் இறுதிவரை உஸ்பெகிஸ்தான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியது. போர்ச்சுகல் தரப்பில் ரொனால்டோ 2 கோல்களை அடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com