

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் ஏ பிரவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு மற்றும் மெக்சிக்கோ அணிகள் மோதின. மெக்சிக்கோ சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் கணக்கை தொடங்க முயற்சிக்க ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் இதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. முதல் பாதி ஆட்டம் முழுக்க யார் கோல் கணக்கை தொடங்கி ஆதிக்கம் செலுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டிருந்தது.
முதல் கோல்:
இதே பரபரப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதியில் மெக்சிக்கோ அணி தனது முதல் கோலை அடித்தது. ஆட்டத்தின் 55-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் மேடியோ சாவெஸ் லூயிஸ் ரோமியோ அமைத்துக் கொடுத்த செட்-அப்-ஐ சரியாக பயன்படுத்தி கோல் அடிக்க அந்த அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆட்டத்தின் 61-ஆவது நிமிடத்தில் மெக்சிக்கோ அணியின் ஜார்ஜ் சான்செஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி ஜூலியன் குயினோன்ஸ் கோல் அடித்து அசத்தினார். இதனால் மெக்சிக்க அணி 0-2 கணக்கில் வலுவான நிலையை எட்டியது. மறுப்பக்கம் செக் குடியரசு தனது கணக்கை தொடங்க போராடியது.
மெக்சிக்கோ வெற்றி:
ஆட்டத்தின் கடைசி வரை போராடிய நிலையில் செக் குடியரசு கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டத்தின் கடைசியில் மெக்சிக்கோ அணிக்கு ராபெர்டோ அல்வாரடோ அமைத்துக் கொடுத்த செட்-அப்-ஐ சரியாக பயன்படுத்தி அல்வாரோ ஃபிட்லாகோ கோல் அடிக்க மெக்சிக்கோ அணி 0-3 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.