

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இங்கிலாந்து மற்றும் டி.ஆர். காங்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அட்லாண்டா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.
ஆட்டத்தின் 7-ஆவது நிமிடத்தில் டி.ஆர். காங்கோ தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் எம்பெம்பா அசிஸ்ட்-இல் ப்ரியன் சிபெங்கா கோல் அடிக்க டி.ஆர். காங்கோ அணி 0-1 கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி வரை 0-1 கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்ற தீவிரம் செலுத்திய நிலையில் இங்கிலாந்து அணி 75-ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. அந்தோனி ஜோர்டன் அசிஸ்ட் செய்ய ஹேரி கேன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 கணக்கில் சமநிலைக்கு வந்தது.
தொடர்ந்து மற்றொரு கோலை அடித்து ஆட்டத்தில் வெற்றியை நெருங்க இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆட்டத்தின் 86-ஆவது நிமிடத்தில் மீண்டும் அந்தோனி ஜோர்டன் அசிஸ்ட்-இல் ஹேரி கேன் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 2-1 கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை டி.ஆர். காங்கோ கோல் அடிக்காததால் இங்கிலாந்து அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.