உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் அணியின் ஆட்டங்களை மெக்சிகோவுக்கு மாற்ற வலியுறுத்தல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் அணியின் ஆட்டங்களை மெக்சிகோவுக்கு மாற்ற வலியுறுத்தல்
Published on

டெக்ரான்:

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஈரான் அணி 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. பெல்ஜியம், நியூசிலாந்து, எகிப்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. ஈரான் அணியின் லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் (ஜூன் 16, 21, 27-ந் தேதிகளில்) அமெரிக்காவில் நடக்கிறது.

இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், உலகக் கோப்பை போட்டியில் ஈரான் அணி கலந்து கொள்வது சாத்தியமில்லை என்று அந்த நாட்டு விளையாட்டு துறை மந்திரி அகமத் டோன்யமாலி சமீபத்தில் அறிவித்தார். இருப்பினும் ஈரான் அணி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்ய சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறி விட்டார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணிக் குரிய ஆட்டங்களை அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்று அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம், பிபாவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஈரான் கால்பந்து சம்மேளன தலைவர் மெக்தி தாஜ் சார்பில் மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதரக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரான் கால்பந்து அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் நாங்கள் நிச்சயமாக அமெரிக்கா செல்லமாட்டோம். உலகக் கோப்பையில் ஈரானுக்குரிய ஆட்டங்களை மெக்சிகோவுக்கு மாற்றுவது குறித்து தற்போது 'பிபா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணையில் இறுதி கட்டத்தில் மாற்றம் செய்வது என்பது முடியாத காரியம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com