மகளிர் டி20 உலகக் கோப்பை: 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
Published on

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் குரூப் பிரிவில், தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கேப்டன் போராட்டம்:

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

பேட்டிங்கில் தடுமாறி கொண்டிருந்த இங்கிலாந்து அணியை, கேப்டன் நாட் சிவர் இறுதி வரை நின்று 53 பந்துகளில் 58 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஃப்ரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடினார்.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் கிம் சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், லூசி ஹாமில்டன், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆஸி. அதிரடி:

எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி மற்றும் ஃபீபி லிட்ச்ஃபீல்டு சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 64 மற்றும் 48 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து எலைசி பெர்ரி மற்றும் ஆஷ்லெய்க் கார்ட்னர் முறையே 13 மற்றும் 3 ரன்களை எடுக்க ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஏழாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com