சதம் அடிப்பதை விட அணியின் வெற்றி தான் எனக்கு முக்கியம் - வைபவ் சூர்யவன்ஷி

ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி செய்தியாளர்களை சந்தித்தார்.
Team victory is more important than century
Published on

பீகாரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயதிலேயே உலகளாவிய சாதனைகளை தகர்த்து, கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போது, வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து தனது அசாத்திய திறமையை சூர்யவன்ஷி நிரூபித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை, 65 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார்.

ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“அடுத்த போட்டியிலும் இதே நேர்மறையான எண்ணத்துடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்ல முயற்சிப்போம்.

எதிரணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் யார், இந்த விக்கெட்டில் அவர்களை நான் எப்படி எதிர்கொள்ள முடியும், பவுண்டரிகள் எவ்வளவு பெரியவை, இதுபோன்ற விஷயங்களை பற்றி சிந்திப்பேன்.

எனது நோக்கத்தில் நேர்மறையாக இருக்க முயற்சிப்பேன். நான் அப்படி செய்யும்போது பந்துவீச்சாளர்கள் அழுத்ததில் இருப்பார்கள். அப்போது ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பேன்.

சதங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், ஆனால் இப்போது கோப்பையை எப்படி வெல்வது என்பதில்தான் கவனம் உள்ளது.

எதிரணிகள் என்ன திட்டமிடுகிறது என்பதைப் பற்றி நான் சிந்திப்பதில்லை, அது அவர்களுடைய திட்டம். என் திட்டத்தில் கவனம் செலுத்தி, இயல்பான கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்பேன்” என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com