

மும்பை:
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்பனை செய்யும் பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த அணியை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய வணிக மாற்றமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையை விற்பனை செய்ய உள்ளது.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு சுமார் 1.1 பில்லியன் முதல் 1.35 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.10,168 கோடி முதல் ரூ.12,479 கோடி) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் தற்போதைய உரிமையாளர்கள் தங்களது பங்குகளை முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியையோ விற்பனை செய்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த அணியை வாங்குவதற்கு தற்போது மூன்று முக்கிய நிறுவனங்கள்/தரப்பினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான ஏல நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமம், அமெரிக்காவின் பிரபல விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர் (David Blitzer) உடன் இணைந்து இந்த ஏலத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்களே தற்போது ரேஸில் முதலிடத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சத்யன் கஜ்வானி தலைமையிலான டைம்ஸ் இன்டர்நெட் குழுமம், ஏற்கனவே சர்வதேச அளவில் பல விளையாட்டு அணிகளில் முதலீடு செய்துள்ளது. இவர்கள் ராஜஸ்தான் அணியின் முழு உரிமையையும் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2008-ல் ஐபிஎல் தொடங்கப்பட்டபோது மிகக் குறைந்த விலைக்கு (சுமார் ரூ. 270 கோடி) வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்று ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விற்பனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணியின் உரிமையாளர் மாற்றத்தில் மிகப்பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.