உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்த முருகன் அஷ்வின்

முருகன் அஷ்வின் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உள்ளிட்ட 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
Murugan Ashwin
Published on

தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஷ்வின் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முருகன் அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான செய்தியில் கூறியதாவது:

எனக்கு 6 வயது இருக்கும்போது நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அன்று முதல் இந்த விளையாட்டை ஆழமாகக் காதலித்து வருகிறேன்.

இன்று நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணமே கிரிக்கெட்தான். இதுவரை எனது பயணம் அற்புதம் வாய்ந்தது. அதை கருத்தில் கொண்டு உங்கள் அனைவருடனும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் பயணத்தில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். எவ்வாறாயினும், நான் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவேன். எப்போதும்போல அதே உத்வேகத்துடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் , டெல்லி டேர்டெவில்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 6 அணிகளில் இவர் விளையாடி உள்ளார்.

ஏற்கனவே, தமிழக ஆல் ரவுண்டரான விஜய் சங்கர் அனைத்து வடிவ உள்ளூர் முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com