மும்பை Vs சென்னை: வெற்றி குறித்து ஆட்டநாயகன் ருதுராஜ் பேச்சு.. தோல்வி குறித்து ஹர்திக் விரக்தி

அவர்களை அவுட் செய்ய நாங்கள் நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்க வேண்டும் போல!
மும்பை Vs சென்னை: வெற்றி குறித்து ஆட்டநாயகன் ருதுராஜ் பேச்சு.. தோல்வி குறித்து ஹர்திக்  
 விரக்தி
Published on

ஐ.பி.எல். 44வது லீக் போட்டி சென்னை, மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் குவித்தது. 160 என்ற இலக்கை துரத்திய சென்னை சார்பில் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் 54 ரன்களும் குவித்தனர். 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் மற்றும் ஆட்டநாயகன் ருதுராஜ் பேசுகையில், "நாங்கள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம். இடையில் மும்பை அணிக்கு வேகம் கிடைத்தது, ஆனால் அதை நாங்கள் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தினோம்.

முதல் சில ஓவர்களை கடந்து செல்வதுதான் முக்கியம். முதல் மூன்று பேட்டர்களில் யாராவது ஒருவர் இறுதி வரை நிற்பது அவசியமாக இருந்தது.

நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். டி20 கிரிக்கெட்டில் சில நேரங்களில் காத்திருக்க வேண்டும். நேரம் வரும்போது ரன்கள் வரும்" என்று தெரிவித்தார்.

தோல்வி அடைந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "இது இந்த இரவு மட்டும் அல்ல, இந்த சீசனே எங்களுக்குச் சரியாக அமையவில்லை.

சிஎஸ்கே அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

ஒரு கட்டத்தில் நாங்கள் 180-190 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு எங்களிடம் வேகம் இல்லை. சரியான பினிஷிங் கிடைக்கவில்லை.

இந்த மைதானத்தில் நேரடியாகப் பந்துகளை எதிர்கொண்டு ஷாட்கள் ஆடுவது கடினமாக இருந்தது.

ஆனால் சிஎஸ்கே பேட்டர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ஆடினார்கள். அவர்களை அவுட் செய்ய நாங்கள் நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்க வேண்டும் போல!" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com