காயத்தை வைத்து கேலி செய்த இந்திய ஊடகங்கள்- கடுமையாகச் சாடிய மிட்செல் ஸ்டார்க்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
காயத்தை வைத்து கேலி செய்த இந்திய ஊடகங்கள்- கடுமையாகச் சாடிய மிட்செல் ஸ்டார்க்
Published on

ஐபிஎல் 2026 தொடர் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் இன்று பெங்களூருவில் மோதுகிறது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தொடக்க போட்டியில் இருந்து விலகுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது. அவர் வேண்டுமென்றே விலகுகிறார் என்று சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தனது காயம் மற்றும் உடல்நிலை குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை ஸ்டார்க் இன்று வெளியிட்டுள்ளார். அதில் தற்போது ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய கோடைகால கிரிக்கெட் தொடரின் போது தனது தோள் மற்றும் முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை அப்போது உணரவில்லை. தற்போது அதற்கான மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளேன்.

என்னைவிட எனது உடலைப் பற்றித் தங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று சில இந்திய ஊடகவியலாளர்கள் தவறான தகவல்களை உண்மைகளைப் போலச் சித்தரித்து, வீரர்கள் குறித்து தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர்.

இந்தக் காயம் சரியான நேரத்தில் ஏற்படவில்லை என்பது எனக்குத் தெரியும். இது டெல்லி அணியின் திட்டங்களைப் பாதிக்கும் என்பதால், அதற்காக அணியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக என்னால் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. விரைவில் முழுத் தகுதியுடன் அணியில் இணைவேன் என நம்புகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்டார்க் இல்லாதது, அந்த அணியின் பந்துவீச்சு பலத்தை ஆரம்பக் கட்டத்தில் சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், ஸ்டார்க்கிற்குப் பதிலாக மற்றொரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை ஆடும் லெவனில் சேர்க்க அந்த அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com