

லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றியோடு தொடங்கும் உத்வேகத்துடன் உள்ள லக்னோ அணி இன்று டெல்லி கேப்பிட்டல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்றிரவு (புதன்கிழமை) நடக்கும் 5-வது லீக்கில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் கடந்த ஆண்டில் விளையாடிய லக்னோ அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 7-வது இடத்தை பெற்று பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது. கடந்த சீசனில் ரிஷப் பண்ட் ஒரு கேப்டனாகவும், பேட்டராகவும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
இதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க அணி நிர்வாகம் பரிசீலனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பண்ட் இருக்கிறார். மற்றபடி மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், ஆயுஷ் பதோனி என தடாலடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை.
பந்து வீச்சில் முகமது ஷமி, ஆவேஷ்கான். ஹசரங்கா, முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள மணிக்கு 150 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் பந்துவீசக்கூடிய மயங்க் யாதவ் அசத்த காத்திருக்கிறார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த ஆண்டில் மயிரிழையில் 'பிளே-ஆப்' வாய்ப்பை கோட்டை விட்டு 5-வது இடத்தை பிடித்தது. அந்த அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பதும் நிசாங்கா. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அபிஷேக் போரல் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் அக்ஷர் பட்டேலுடன், குல்தீப் யாதவ், இங்கிடி, முகேஷ் குமார், ஜாமிசன், டி.நடராஜன் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆனால் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தாமதமாக இணைவது பின்னடைவாகும். அதே நேரத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில் மொத்தம் 60 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக கோப்பையை வெல்ல உதவிய வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியின் பந்து வீச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை ரூ.8.4 கோடிக்கு டெல்லி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் டெல்லியும், 3-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.