

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஜெய்ஸ்வால் மட்டும் 29 ரன்களில் நடையை கட்டிய நிலையில், சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடி 29 பந்துகளில் 97 ரன்களை விளாசினார்.
இதில் 5 பவுண்டரிகளும், 12 சிக்சர்களும் அடங்கும். இந்த ஒற்றை இன்னிங்ஸ் மூலம் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை முறியடித்தும், புது சாதனைகளை படைத்தும் அசத்தினார்.
இவருடன் ஆடிய துருவ் ஜூரெல் 21 பந்துகளில் 50 ரன்களும், கேப்டன் ரியான் பராக் 26 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ப்ரஃபுல் ஹிஞ்ச் 3 விக்கெட்களையும், இஷான் மலிங்கா, சிவாங் குமார் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரான டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் நடையை கட்டினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 11 பந்துகளில் 33 ரன்களை குவித்தார்.
அடுத்தடுத்து வந்தவர்களில் கிளாசன் 18 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்களும், சலில் அரோரா 35 ரன்களும் குவித்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் சிவாங் குமார் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 2 பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களையும், நான்ட்ரெ பர்கர், சுஷாந்த் மிஷ்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களையும், யாஷ் ராஜ் புஞ்சா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது.