ஐ.பி.எல். வரலாற்றில் உச்சம்... புது சாதனை படைத்த ஆர்.சி.பி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் ரஜத் பட்டிதார் 93 ரன்களை விளாசினார்.
ரஜத் பட்டிதார்
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலாவது பிளேஆஃப் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். வரலாற்றில் அசத்தல் சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். பிளேஆஃப் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை குவித்தது.

இது ஐ.பி.எல். பிளேஆஃப் சுற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோராக மாறியது. முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளேஆஃப் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 233 ரன்கள் அடித்ததே, பிளேஆஃப் சுற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இவர் தவிர விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்களும், க்ரூணால் பாண்டியா 28 பந்துகளில் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் அடித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com