குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது பிளேஆஃப் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் அய்யர் (19) மற்றும் விராட் கோலி (43) சிறப்பான துவக்கம் கொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்களும் விளாசினர். க்ரூணால் பாண்டியா தன் பங்கிற்கு 28 பந்துகளில் 43 ரன்களை விளாச ஆர்.சி.பி. அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை குவித்தது.

255 எனும் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் 14 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 2 ரன்களிலும், நிஷாந்த் சிந்து 5 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்கள், ஜேசன் ஹோல்டர் டக் அவுட் ஆகினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதும் சிறப்பாக ஆடிய ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குஜராத் தரப்பில் தனி ஆளாக போராடிய ராகுல் தேவாட்டியா 43 பந்துகளில் 68 ரன்களை குவித்தார்.

இதனால் 92 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல். 2026 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேக்கப் டஃபி 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம், க்ரூணால் பாண்டியா தலா 2 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com