வெளிப்படைத்தன்மைக்கு வேட்டு.. BCCI அரசு நிறுவனம் கிடையாது, RTI சட்டத்தின் கீழ் வராது என அறிவிப்பு

2019 முதல் 2024 வரை இதன் தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்பட்டார்.
வெளிப்படைத்தன்மைக்கு வேட்டு.. BCCI அரசு நிறுவனம் கிடையாது, RTI சட்டத்தின் கீழ் வராது என அறிவிப்பு
Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக உள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட அதிக வருவாய் ஈட்டும் போட்டிகளை இவ்வமைப்பே நடத்தி வருகிறது.

இதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ உடைய செயல்பாடுகளை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியாதபடி மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தகவல் ஆணையம் (CIC) ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, பிசிசிஐ ஒரு அரசு அமைப்பு கிடையாது என்றும், அவ்வமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)-இன் கீழ் வராது என்றும் மத்திய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார்.

பிசிசிஐ, அரசியலமைப்பாலோ அல்லது நாடாளுமன்ற சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்பதால் அதை அரசு அமைப்பாக கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னணி:

2018இல் அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு, பிசிசிஐயை பொது நிறுவனம் என அறிவித்து, ஆர்டிஐ அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து பிசிசிஐ உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்திருந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது. இந்த சூழலில் மத்திய தகவல் ஆணையர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

முன்னதாக 2019 முதல் 2024 வரை பிசிசிஐ தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்பட்டார்.

அவருக்கு பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com