

2028 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் பங்கேற்க "உயிரியல் ரீதியான பெண்கள்" மட்டுமே தகுதியுடையவர்கள் என்ற புதிய விதிமுறையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொண்டுவந்துள்ளது.
அதாவது பிறக்கும்போதே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு மரபணுப் பரிசோதனை செய்யப்படும் என்றும், அதன்மூலம் உயிரியல் ரீதியாகப் பெண்கள் என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வரலாற்றில் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிர்ஸ்டி கோவென்ட்ரி தலைமையின் கீழ் இந்த கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் விளையாடுவதற்கு தடை விதித்தார்.
பள்ளிகளில் திருநங்கைகள் தொடர்பான சில கொள்கைகளை மாற்றியமைக்கும் மற்றும் இனம் சார்ந்த சில பாடத்திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவுகளிலும் அவர் கையெழுத்திட்டிருந்தார்.
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கை வீரர்கள் போட்டியிட அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.