

ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிபயைர்-2 ஆட்டத்தில் குஜராத் கேப்டன் சுப்மன்கில் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
அவர் 53 பந்தில் 15 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். போட்டியில் அவரது 5-வது செஞ்சுரியாகும்.
பிளேஆப் சுற்றில் சுப்மன் கில் 2-வது முறையாக சதம் அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2023-ல் மும்பை அணிக்கு எதிராக ‘குவாலிபயைர்-2’ ஆட்டத்தில் அவர் 129 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல். நாக் அவுட்டில் 2 சதத்தை பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.
மேலும் பிளேஆப்பில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையும் சுப்மன் கில் படைத்தார். இதற்கு முன்பு டேவிட் வார்னர் 2016-ம் ஆண்டும், ரஜத் படிதார் கடந்த 26 -ந்தேதி குவாலிபையர்-1 ஆட்டத்திலும் 93 ரன் எடுத்ததே கேப்டன் பதவியில் அதிக பட்சமாக இருந்தது. இதை சுப்மன் கில் முறியடித்தார்.
சுப்மன்கில்லும், சாய் சுதர்சனும் முதல் விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. இதன் மூலம் பிளேஆப் சுற்றில் இந்த ஜோடி அதிக ரன் எடுத்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2011 இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே.வின் முரளி விஜய்-மைக் ஹஸ்சி ஜோடி 159 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சுப்மன்கில்-சாய்சுதர்சன் ஜோடி 11-வது முறையாக 100 ரன்னுக்கு மேல் எடுத்தும் சாதனை படைத்தது. இதற்கு முன்பு டிவில்லியர்ஸ்- விராட்கோலி ஜோடி 10 தடவை 100 ரன்னுக்கு மேல் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக கெய்ல்-கோலி ஜோடி 9 தடவை எடுத்து இருந்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 போட்டியில் 776 ரன்கள் எடுத்தார். இதில் 1 சதமும், 5 அரை சதமும் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடர்களில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சூர்யவன்ஷி 5-வது இடத்தை பிடித்தார்.
விராட்கோலி (973 ரன் -2016-ம் ஆண்டு) சுப்மன் கில் (890-2023), பட்லர் (863-2022), வார்னர் (848-2016) ஆகியோருக்கு அடுத்த நிலையில் சூர்யவன்ஷி உள்ளார்.
சூர்யவன்ஷி 72 சிக்சர்களும், 63 புவுண்டரிகளும் (மொத்தம் 135) அடித்தார். இதன்மூலம் பட்லரை முந்தினார். அவர் 2022-ல் 83 பவுண்டரிகள், 45 சிக்சர்கள் (மொத்தம் 128) அடித்து இருந்தார்.
ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் 1000 ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் சூர்யவன்ஷி படைத்தார்.