கோடி புண்ணியம் தரும் அன்னதானம்

அன்னதானம் செய்யும்போது, பிறர் 'போதும்' என்று சொல்லும் அளவிற்கு மனம் உவந்து செய்ய வேண்டும்.
annadanam
Published on

'தானங்களில் சிறந்தது அன்னதானம்' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. மிக உயர்ந்ததாகவும், இறைவனுக்கு உகந்ததாகவும் கருதப்படுவது, பசிப்பிணி போக்கும் அன்னதானம் ஆகும். மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டியது தானமும், நிதானமும் ஆகும். 'பதறாத காரியம் சிதறாது' என்பதற்கேற்ப நிதானத்தோடு இருந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும். அந்த நிதானத்தை விட முக்கியமானது, அன்னதானம் ஆகும்.

'அன்னம்' என்பது உணவைக் குறிக்கும். ஆன்மிகத்தில் அன்னதானத்தை 'மகாதானம்' என்றும் அழைப்பர். பொன், பொருள், பூமி என எந்தத் தானத்தைப் பெற்றுக்கொண்டாலும் மனித மனம் 'இன்னும் வேண்டும்' என்றே பேராசைப்படும். ஆனால், உணவை மட்டும் தான் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் 'போதும்' என்ற திருப்தியோடு நிறைவாக ஏற்கிறார்கள்.

annadanam

அன்னதானம் செய்யும்போது, பிறர் 'போதும்' என்று சொல்லும் அளவிற்கு மனம் உவந்து செய்ய வேண்டும். 'போதும்' என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை அள்ளித் தரும். ஒரு மனிதனின் பசியை ஆற்றுவது என்பது, அவனுள் இருக்கும் ஜீவாத்மாவிற்கு செய்யும் ஆன்மிகப் பூஜையாகும். பசியோடு இருப்பவருக்கு அன்னமிடும்போது, அவர்களின் வயிறும் மனமும் குளிர்ந்து தரும் ஆசி, நம்முடைய எத்தனையோ தலைமுறை பாவங்களையும், பித்ரு தோஷங்களையும் நீக்கும் வல்லமை கொண்டது.

இந்த உன்னத தர்மத்தை பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் ஆகிய விசேஷ நாட்களிலும், பாத யாத்திரை மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் வழங்கலாம். அப்படி அன்னதானம் செய்யும்போது, சாப்பிடாமல் இருந்து, நமது கரங்களால் பரிமாறுவதே மிகச் சிறந்த பலனைத் தரும். அதனால்தான், காசி முதல் ராமேஸ்வரம் வரை இறை வழிபாட்டில் அன்னதானத்திற்கு முதலிடம் தரப்படுகிறது.

கோடி புண்ணியம் தரும் இந்த அன்னதானத்தை, நம்மால் இயன்ற அளவு ஏழை எளியோருக்கு வழங்கி, மனநிறைவை பெறுவோம்.

annadanam
X

Maalai Malar
www.maalaimalar.com