

தாராளமான தன வரவு உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதைப் பற்றி கவலைப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே தலையாய நோக்கமாக இருப்பீர்கள். வீரமும் தைரியமும் எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகமும் கூடும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். திருமணம் முயற்சி வெற்றி தரும். மறு விவாகத்திற்கு நல்ல வரன் அமையும். தள்ளிப் போன வழக்குகள் விசாரணைக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். சுப பலனை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை முருகனை 9 முறை வலம் வந்து வழிபடவும்.
தொட்டது துலங்கும் வாரம். சுக ஸ்தான அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல தோற்றம், நிறைந்த நிம்மதி, சிந்தித்து செயல்படும் திறன், ஒரு கூட்டத்தை வழி நடத்தும் திறமை ஆகியவை ஏற்படும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். தொட்டது துலங்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும். நிறைந்த ஆரோக்கியம், ஆடம்பரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள் மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை, உழைக்காத அதிர்ஷ்ட வருமானம், உயில் சொத்துக்கள் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் நடைபெறும். புகழ், அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். வெள்ளிக்கிழமை மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட பணவரத்து கூடும்.
பொறுமையோடு செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதன் வக்ரகதியில் ராசிக்குள் நுழைகிறார். கொடுக்கல் வாங்கல் மற்றும் பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.எனினும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிப்பார்கள்.பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு தனிமை, அடிமை, சிறை தண்டனை, நோயால் படுத்த படுக்கையாக கிடப்பது போன்ற பலன் நடக்கும். முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தத்திற்கு கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். மருமகனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.முதல் திருமணம் விவாகரத்து பெற்றவர்களுக்கு மறு வாழ்க்கை வளம் பெறும். புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் ஒத்தி வைக்கவும். புதன்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவும்.
சங்கடங்கள் நீங்கும் வாரம். ராசியில் உள்ள உச்ச குருவின் 9ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சனியின் மேல் பதிகிறது. வெளிநாட்டு பணப் புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். சிலர் கடன் வாங்கி சுய தொழில் நடத்தி முன்னேறுவார்கள். வராக்கடனாக நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்கும் விரும்பம் நிறைவேறும். அரசுப் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். தாய் மற்றும் நண்பர்கள் உதவியால் வீடு கட்டும் பணி துரிதமடையும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். இந்த ஜென்மத்தில் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும்,வெற்றிகளையும் அடைவீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். 6.7.2026 அன்று காலை 9.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். அனைவரிடம் பொறுமையாக அன்பாக பழகுவது நல்லது. பொருளாதாரத்தில் நலிந்த வர்களுக்கு ஆடை தானம் வழங்கவும்.