ஸ்ரீரங்கம் கோவிலில் வசந்த உற்சவம்: தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. நம்பெருமாள் அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.
நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் உலா வந்தபோது எடுத்த படம்.
நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் உலா வந்தபோது எடுத்த படம்.
Published on

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com