திருவானைக்காவல் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தைத்தெப்பம் 3-ந்தேதி நடைபெறுகிறது. 5-ந்தேதி ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
திருவானைக்காவல் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இந்த கோவிலில் தை தெப்பத்திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து கோவிலை அடைந்தனர். தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி வெள்ளிமஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில், 26-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்தில், 27-ந்தேதி இரவு சுவாமி கைலாசபர்வதம் வாகனத்தில், அம்மன் அன்னபட்சி வாகனத்தில், 28-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில், 29-ந் தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில், அம்மன் பல்லக்கில், 30-ந் தேதி இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்தில், 31-ந் தேதி இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில், அம்மன் பல்லக்கில் 4ம் பிராகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.

தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் 3- ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல் மாலை 6.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். 5-ந்தேதி காலை கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு, மாலை ரிஷபாரூட காட்சியுடன் தை தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com