சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா- இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை விழாவானது இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா.
Published on

திருச்சி:

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்ற போதிலும் அதில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவானது இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை 6.30 மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி இன்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு வீதி உலா கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இரண்டாம் திருநாளான நாளை காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இதேபோல் தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து இரவு 8 மணிக்கு ஒவ்வொரு நாளும் தினம் ஒரு வாகனமாக அதாவது பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேச வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி வீதிஉலா கண்டருளுகிறார்.

இப்படி 9 நாட்கள் முடிந்து 10 ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com