என் மலர்
வழிபாடு

ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களில் பலர் வரவில்லை: பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்ட சபரிமலை
- ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. முதலில் தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் உடனடி முன்பதிவு மூலமாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க, உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை, பம்பை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டபடியே இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரினத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் படி நெரிசல் எதுவும் இல்லாத நேரத்தில் உடனடி முன்பதிவு பக்தர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் எதுவும்இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்துக்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களின் பயணத்தை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.
அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போன்று வரக்கூடிய பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இருக்கக்கூடிய பக்தர்களில் பலர், வெளி மாநில பக்தர்கள் ஆவர்.
அவர்கள் வரக்கூடிய ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு 16,989 பக்தர்களே மலையேறிச் சென்றனர்.
இதன் காரணமாக சன்னிதானம் அருகே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு உள்ள நடைப்பந்தலில் இரண்டு வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். இதனால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் வேகமாக ஏறிச் செல்லாமல், பொறுமையாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.






