ராயக்கோட்டையில் சோமநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

கிராம தேவதை ஆலயத்தில் இருந்து புனித நீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
Somanaadheeswarar Temple
கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்த காட்சி
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சூளகிரி சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு சோமநாதேஸ்வரர் சமேத காமாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்துக் சமய அறநிலையத் துறை மூலம் ரூ.53 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கோயில் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 22-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் ஸ்தம்ப பிரதிஷ்டை, சாமி-அம்மனுக்கு கங்கனம் கட்டும் நிகழ்ச்சி, பந்தக்கால் முகூர்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பூஜைகள்

தொடர்ந்து, கிராம தேவதை ஆலயத்தில் இருந்து புனித நீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று வேத விற்பன்னர்கள் தலைமையில் கோ பூஜை, விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதி கார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மூலவர் சோமநாதேஸ்வரர் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கப்பட்டது.

தொடர்ந்து, விழாக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வேப்பன ஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஆய்வாளர் வேல்ராஜ், செயல் அலுவலர் கண்ணன், கோயில் பணியாளர்கள், சென்னை நகரைச் சேர்ந்த உபயதாரர்கள் சரவணன், குபேந்திரன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com